மை லார்ட் திரைப்படத்தில், கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றும் சைத்ராவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது. அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் கணவர் சசிகுமார். ஆனால் அங்கு முறையான சிகிச்சை கிடைக்காததால், அவர்கள் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல், வட்டிக்கு பணம் கடன் பெறுகிறார்கள். கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், “நீங்களும் உங்க மனைவியும் கிட்னி விற்று கடனை அடைச்சுக்கோங்க” என்று பணம் கொடுத்த நபர் மிரட்டுகிறார்.
அந்த மிரட்டலால் பயந்து, இருவரும் ஊரை விட்டு தப்பிச் செல்கிறார்கள். இதற்கிடையில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் அவர்கள் உயிரிழந்ததாக போலி சான்றிதழ் தயாரித்து, காப்பீட்டு தொகையைப் பெற்றுக்கொள்கிறார் வட்டிக்காரர். ஆனால் “நாங்க சாகல, நாங்கள் உயிரோட இருக்கிறோம்” என்று மீண்டும் ஊருக்கு வந்து தங்களது வாழ்வுரிமைக்காக போராடுகிறார்கள் சசிகுமாரும் சைத்ராவும்.
இந்நேரத்தில், மத்திய அமைச்சரின் பிரதிநிதியாக வரும் ஆஷா சரத் இவர்களை அணுகி, “மேடத்துக்கு கிட்னி கொடுத்தால் பணம் தருகிறோம்; உங்க பிரச்சினை தீர்க்கப்படும்” என்று ஒப்பந்தம் பேசுகிறார். அதனை நம்பி சென்னை நோக்கி புறப்படும் தம்பதியருக்கு என்ன நடக்கிறது, அவர்கள் இறுதியில் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையே படம் விவரிக்கிறது. தலைப்பு காரணமாக இது முழுக்க நீதிமன்றக் கதை என நினைக்க வேண்டியதில்லை. நீதிமன்றக் காட்சிகள் இடம்பெற்றாலும், அதைவிட அரசியல் மற்றும் அதிகாரத்தின் தாக்கத்தால் எளிய மனிதர்கள் எவ்வாறு சிக்குகின்றார்கள் என்பதையே இயக்குநர் ராஜூ முருகன் தனது நகைச்சுவை கலந்த நையாண்டி பாணியில், மனிதநேய உணர்வுகளுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
கிட்னி திருட்டு மற்றும் சட்டவிரோத உறுப்பு விற்பனை போன்ற சமூக பிரச்சினைகளே படத்தின் மையக்கரு. பணத்திற்காகவும் குடும்பச் சூழ்நிலைக்காகவும் அப்பாவிகள் எவ்வாறு சிக்கிக்கொள்கிறார்கள், அவர்களை ஒரு குழு எப்படிக் கபடமாக பயன்படுத்துகிறது என்பதைக் காட்டுகிறது. அடிக்கடி செய்திகளில் வாசிக்கும் சம்பவங்களை கமர்ஷியல் அம்சங்களும் அரசியல் சாடலும் கலந்து வழங்கியுள்ளதால், படம் சிந்திக்க வைக்கிறது. “நான் சாகல, உயிரோட இருக்கேன்” என்று சசிகுமார் அதிகாரிகளை அதிர வைக்கும் காட்சியிலிருந்தே படம் தொடங்குகிறது; அங்கிருந்தே ராஜூ முருகனின் நையாண்டி தொடங்கிவிடுகிறது.
முத்துசிற்பி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமார் முழுமையாக உயிர் ஊட்டியுள்ளார். சைத்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தருணம் முதல் திருமணம், மனைவியின் மருத்துவச் செலவுக்காக தவிப்பது, கடனில் அவமானப்படுவது, பின்னர் கிட்னி விற்க சென்னை செல்லத் தயாராகுவது, மத்திய அமைச்சர் பிரதிநிதியுடன் மோதுவது என பல்வேறு காட்சிகளில் ஆழமான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் வள்ளலார் தத்துவத்தை விளக்கி பேசும் உரையும், அதனைத் தொடர்ந்து அவர் மேற்கொள்ளும் அதிரடி செயலும் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது. அரசியல் மற்றும் அதிகாரத்தின் பாதிப்பில் சிக்கிய ஒரு சாதாரண கிராமத்து மனிதனாக அவர் மனதில் நிற்கிறார். அவரது திரை வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படைப்பாகும்.
கன்னட நடிகை சைத்ரா, கோவில்பட்டி சுசீலாவாக முற்றிலும் மாறி சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். அவரது உடல் மொழி, உடைத் தேர்வு மற்றும் மேக்கப் அனைத்தும் இயல்பாக அமைந்துள்ளது. முதல் பாதியில் வலிமையாகத் தோன்றிய அவரது கதாபாத்திரம், இரண்டாம் பாதியில் சற்றே மந்தமாக மாறுவது ஒரு குறையாக உணரப்படுகிறது. லோக்கல் நிருபராக வரும் குரு சோமசுந்தரம் தனது தனித்துவமான பேச்சு நடை மூலம் கவனம் ஈர்க்கிறார். வக்கீலாக வரும் கோபிநயினார் மற்றும் நீதிபதியாக வரும் ஜெயபிரகாஷ் ஆகியோரின் வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பெரும்பாலும் படுக்கையிலேயே காட்சியளித்தாலும், மத்திய அமைச்சராக ஆஷா சரத் தனது கண்களின் வெளிப்பாட்டால் கதைக்கு பலம் சேர்த்துள்ளார். அந்தக் கதாபாத்திரம் யாரோ ஒரு நிஜ அரசியல்வாதியை நினைவூட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசையும் அரசியல்வாதிகளையும் நையாண்டி செய்யும் காட்சிகள் இடையிடையே இடம்பெறுகின்றன. தயாரிப்பாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், மாநில அரசை அதிகமாக சாடாமல் இயக்குநர் சமநிலையை பேணியுள்ளார். அதிகாரம் கைக்கு வந்தவுடன் சிறையில் சசிகுமார் நிகழ்த்தும் சம்பவங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
இதற்கு அப்பால், புரோக்கராக வரும் அருள் ஏழிலன், வட்டிக்காரியாக வரும் வசுமித்ரா, வள்ளலார் மையத்தை நடத்தும் பெண்மணி, ராஜூ முருகனுடன் தோன்றும் தாத்தா, மத்திய அமைச்சர் பிரதிநிதி மற்றும் அவரின் வாரிசுகள், பிரபல மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் கதையுடன் இணைந்து செல்கின்றன. பல்வேறு பின்னணியிலிருந்து வரும் இத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் நடிப்பின் மூலம் படத்தை ஆர்வத்துடன் பார்க்க வைக்கின்றன
