சென்னையில் வசித்து வரும் ஹீரோ அபிஷன் ஜீவிந்த், தனது அக்காவின் வற்புறுத்தலால் ஹீரோயின் அனஸ்வரா ராஜனை ஒரு காபி ஷாப்பில் சந்திக்கிறார். திருமணம் குறித்து இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது, தாங்கள் இருவருமே திருச்சியில் ஒரே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பதை அறிந்து கொள்கிறார்கள். அதன்பின், தங்களின் பள்ளி பருவ நினைவுகள், முதல் காதல் தொடர்பான மலரும் நினைவுகளில் இருவரும் மூழ்குகிறார்கள். நாம் காதலித்தவர்கள் இப்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நேரில் சென்று பார்க்கலாமே என்ற புதுமையான முடிவை எடுத்துக்கொண்டு, இருவரும் திருச்சிக்குப் பயணம் மேற்கொள்கிறார்கள். அபிஷன் ஜீவிந்த் தனது காதலி காவ்யாவை சந்தித்து பேசினாரா? அனஸ்வரா தனது காதலன் சச்சினை பார்த்தாரா? அந்த முன்னாள் காதலர்களின் வாழ்க்கை நிலை, மனநிலை எப்படி இருக்கிறது, யாருக்கு யாருடன் திருமணம் நடந்தது என்பதே ‘வித்லவ்’ திரைப்படத்தின் கதையாக அமைந்துள்ளது. இந்த படத்தை புதுமுக இயக்குநர் மதன் இயக்கியுள்ளார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற வெற்றிப் படத்தை வழங்கிய அபிஷன் ஜீவிந்த், இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். பிரபல மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர்களின் அறிமுகம், உரையாடல், பயணம், மோதல், காதல் ஆகியவையே படத்தின் மைய கருவாக அமைந்துள்ளன. பெரும்பாலும் இளைஞர்களால் உருவாக்கப்பட்டு, இளைஞர்களே நடித்துள்ள படம் என்பதால், முழுக்க முழுக்க இளமை துள்ளலுடன் படம் நகர்கிறது. அவர்களின் காதல், வாழ்க்கை, குடும்பம் குறித்த பார்வை, பேசும் மொழி, எண்ண ஓட்டங்கள் அனைத்தும் இயல்பாகவும் நன்றாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், சற்று வயதானவர்கள் அல்லது பாரம்பரிய சிந்தனையில் ஊறியவர்கள் இந்த படத்துடன் கனெக்ட் ஆகுவது சற்று கடினமாக இருக்கலாம்.
ஹீரோவாக அறிமுகமாகியுள்ள அபிஷன், ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக சிறப்பாக ஸ்கோர் செய்துள்ளார். தனது வருங்கால மனைவி அனஸ்வராவை சந்தித்து பேசுவது, தனது பள்ளிக் கால காதலை பகிர்ந்து கொள்வது, அவரது வற்புறுத்தலால் திருச்சிக்குச் சென்று தனது பழைய காதலியை சந்திப்பது, பின்னர் அனஸ்வரா தனது காதலனை சந்திக்கும் தருணங்கள் என பல இடங்களில் நிறைவான நடிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக, திருச்சி பள்ளி பகுதி காட்சிகளில் அவர் மிகவும் கியூட்டாக தெரிகிறார். மாணவன் கெட்-அப்புக்கும் அவர் பக்காவாக பொருந்தியுள்ளார். பள்ளியில் காதலை சொல்ல முயற்சிக்கும் தருணங்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த காதலியை மீண்டும் பார்த்து பேசுவது, கடைசியில் தனது காதல் தோற்றுவிடுமோ என்ற பயத்தில் அடிக்கடி லூட்டி ஆகும் காட்சிகள் எல்லாம் செம. ஹீரோயிசம் இல்லாத, செயற்கை தனமற்ற அவரது நடிப்பு பலரை ஈர்க்கும் வகையில் உள்ளது. தமிழுக்கு ஒரு புதிய ஹீரோ கிடைத்திருக்கிறார் என்ற உணர்வை அவர் ஏற்படுத்துகிறார்.
ஆனால், சில இடங்களில் அவர் ஓவர் ஆக்டிங் செய்திருப்பது தெரிகிறது. அதை சற்று குறைத்திருக்கலாம். அதேபோல், சில காட்சிகளில் பிரதீப் ரங்கநாதன் சாயல் வருவதையும் தவிர்த்திருக்கலாம். ஆக்ஷன், வெட்டு, குத்து என சென்று சினிமாவை கெடுக்காமல் இருப்பதே அவருக்கு நல்லது. அவரின் நண்பர்களாக வரும் நடிகர்களும் இயல்பாக நடித்துள்ளனர். நம்முடைய பள்ளி நாட்களின் நண்பர்கள் நினைவுக்கு வரும் அளவுக்கு அந்த நடிப்பு அமைந்துள்ளது. படத்தின் பெரிய பிளஸாக அனஸ்வரா ராஜனின் நடிப்பு அமைந்துள்ளது. மோனிஷா கதாபாத்திரமாக அவர் காட்டும் உடல் மொழி, அழகான நடிப்பு, தைரியமான முடிவுகள் மற்றும் உரையாடல்கள் அனைத்தும் கவனம் ஈர்க்கின்றன. காபி ஷாப்பில் தொடங்கி, திருச்சி, சென்னை என அனைத்து இடங்களிலும் இன்றைய மாடர்ன் பெண்ணாக அவர் கலக்கியுள்ளார். பள்ளி பகுதி, காதல் பகுதியிலும் அவரது நடிப்பு மனதில் நிற்கிறது. அவரது கோபமும் கூட அழகாகவே வெளிப்படுகிறது. ஹீரோவுடன் அவரது கெமிஸ்ட்ரி பக்காவாக செட் ஆகி இருக்கிறது. ஆனால், பேசும் இடங்களில் மலையாள வாடை அதிகமாக இருப்பது ஒரு குறை. சொந்த குரலில் பேசாமல் வேறு ஒருவரை வைத்து டப்பிங் பேச வைத்திருந்தால், அந்த கதாபாத்திரம் இன்னும் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். படம் பார்க்கும் இளைஞர்கள் அனஸ்வராவை கொண்டாடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அபிஷனின் காதலியாக வரும் காவ்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை, “யாருடா இந்தப் பொண்ணு?” என்று கேட்க வைக்கிறார். பள்ளி பகுதி காட்சிகளில் அதிகம் பேசாமல், அமைதியான நடிப்பின் மூலம் ரசிக்க வைக்கிறார். இரண்டாம் பாதியில் அவர் இன்னொரு பரிமாணத்தில் வந்து அனைவரிடமும் கைதட்டல் பெறுகிறார். அதேபோல், ஹீரோயின் காதலனாக வரும் சச்சின் நாச்சியப்பனும், திருச்சி வாழ்க்கை மற்றும் கிளைமாக்ஸ் பகுதிகளில் சில நிமிடங்களிலேயே கவனம் ஈர்க்கிறார். நான்கு முக்கிய கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதை நகர்ந்தாலும், திருச்சி பள்ளி ஆசிரியராக வரும் சரவணன் கதாபாத்திரமும், அவர் மூலம் சொல்ல வரும் கருத்தும் டச்சிங் ஆக உள்ளது. ஹீரோவின் அக்காவாக வரும் ஆர்.ஜே. ஆனந்தி, அப்பாவாக வரும் முருகேசன் ஆகியோர் குறுகிய நேரமே வந்தாலும், நிறைவான பாத்திரங்களாக மனதில் நிற்கின்றனர்.
சென்னை பகுதி காட்சிகள் ஒரு வித அழகாக இருந்தால், திருச்சியில் நடக்கும் ஃபிளாஷ்பேக் பள்ளி காட்சிகள் இன்னும் அழகாக அமைந்துள்ளன. அந்த காட்சிகளை பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கு தங்களின் பள்ளி நாட்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், முதல் காதல், அதற்காக ஏற்பட்ட சண்டைகள், தயக்கம், அவமானம் போன்ற பல நினைவுகள் தானாகவே மனதில் ஓடி வரும். கிளைமாக்ஸ் எக்ஸ்பெரிமென்ட்டாகவும் இல்லாமல், சோகமாகவும் இல்லாமல், கலகலப்பாகவும் நிறைவாகவும் முடிவது படத்தை ரசிக்க வைக்கிறது. ஷ்ரேயாஸ் ஒளிப்பதிவு திருச்சி நகரத்தையும், அந்த பள்ளி காட்சிகளையும் அழகாக காட்சிப்படுத்துகிறது. அதேபோல், சின்ன சின்ன வசனங்களும், பாசிட்டிவ் காட்சிகளும் பார்வையாளர்களை விசில் அடிக்க வைக்கின்றன.
ஆனால், திரைக்கதையில் திருப்பங்களும் விறுவிறுப்பும் குறைவாக உள்ளது. “இதுதான் நடக்கப் போகிறது” என்ற எண்ணம் வருவதும், அது அப்படியே நடப்பதும் படத்தின் பலவீனமாக இருக்கிறது. ‘ஆட்டோகிராப்’, ‘பள்ளிக்கூடம்’ உள்ளிட்ட பல படங்கள் நினைவுக்கு வந்து செல்கின்றன. இரண்டாம் பாதியில் இருக்கும் வேகம், முதல் பாதியில் மிஸ்சிங் ஆகிறது. படம் முழுவதும் ஏதாவது ஒரு கதாபாத்திரம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பதும் சில நேரங்களில் போரடிக்கிறது. காதல் கதை என்றாலும், அதை அழுத்தமாக சொல்லாமல், காமெடி கலந்த சுலபமான முறையில் கடத்திச் சென்றிருப்பது ‘வித்லவ்’ படத்தை சராசரி படமாக மாற்றிவிடுகிறது.
