‘மைலாஞ்சி’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

வனவிலங்கு புகைப்படக் கலைஞராக இருக்கும் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக், ஒரு அரிய பறவையை புகைப்படம் எடுக்க ஊட்டிக்கு பயணம் செய்கிறார். அங்கு பறவைகள் பூங்கா ஒன்றை நடத்தி வரும் நாயகி கிரிஷா குரூப்புடன் அவருக்கு நட்பு உருவாகிறது. காலப்போக்கில் அந்த நட்பு காதலாக மாறுகிறது. தனது காதலை கிரிஷா குரூப்பிடம் வெளிப்படுத்த நினைக்கும் தருணத்தில், கிரிஷா குரூப் தானே ஒருவரை காதலித்து வருவதாகவும், அவர் தற்போது எங்கு இருப்பார் என்பது தெரியவில்லை என்றும் கூறுகிறார். மேலும், தன்னை தனது காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஸ்ரீராம் கார்த்திக்கிடம் வேண்டுகோள் விடுக்கிறார்.

இதனால் மனவருத்தம் அடையும் ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப்பின் காதலை இணைத்து வைப்பதாக சொல்லி நடிப்பதன் மூலம் தனது உணர்வுகளை மறைக்கிறார். ஒரு கட்டத்தில், கிரிஷா குரூப்பின் காதலன் ஊட்டிக்கு வருகிறார். இறுதியில் கிரிஷா குரூப்பின் காதலன் யார்? ஸ்ரீராம் கார்த்திக் அவர்களை உண்மையாக இணைத்து வைத்தாரா? அல்லது தனது காதலை வெளிப்படுத்தினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தனது கதாபாத்திரத்திற்கு உரிய நியாயத்தை வழங்கும் வகையில் அவர் நடித்திருக்கிறார். நாயகியாக நடித்துள்ள கிரிஷா குரூப், சுறுசுறுப்பான மற்றும் வெகுளித்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர முயற்சித்துள்ளார். கிரிஷா குரூப்பின் ஒருதலை காதலனாக நடித்துள்ள நடிகர் தனது வேலையை முறையாக செய்துள்ளார். முனிஷ்காந்த் மற்றும் சிங்கம்புலி இருவரும் இடையிடையே நகைச்சுவை தருணங்களை உருவாக்கி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளனர். மற்ற துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவியாக அமைந்துள்ளது.

காதலை மையமாக கொண்டு இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் அஜயன் பாலா. காதல் காட்சிகளும் வசனங்களும் எதிர்பார்த்த அளவுக்கு உணர்ச்சி பூர்வமாக அமைவில்லையென்பது சிறிய குறையாகும். காதலித்த பெண்ணின் காதலை இணைத்து வைக்க முயலும் நாயகனின் கதையை பல படங்களில் பார்த்திருந்தாலும், இதில் சிறிய மாற்றத்துடன் கதை சொல்லப்பட்டுள்ளது. இளையராஜாவின் இசையில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் கேட்கத் தகுந்தவை. பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. செழியனின் ஒளிப்பதிவு இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக திகழ்கிறது. குறிப்பாக ஊட்டி மலையின் இயற்கை அழகை கண்கொள்ளாக் காட்சிகளாக பதிவு செய்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading