கணேஷ் சந்திரா இயக்கத்தில் உருவான பூக்கி என்ற காதல் கதை, அஜய் மற்றும் தனுஷா என்ற இளைஞர் ஜோடியை மையமாகக் கொண்டது. சில ஆண்டுகளாக காதலித்து வரும் இருவரும் திருமணத்திற்குத் தயாராகும் நேரத்தில் கடுமையான சண்டையில் ஈடுபடுகிறார்கள். அந்த சண்டை எல்லை மீறி, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் நிலைக்கு செல்ல, அதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடுகிறார். அதன்பின் அவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகின்றனர். இதனால் இருவரும் பிரேக் அப் செய்ய முடிவு செய்கிறார்கள்.
ஆனால் பிரிவுக்குப் பிறகும், அஜயும் தனுஷாவும் அந்த உறவின் நினைவுகளிலிருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். தங்களை மறக்கச் சாப்பாடு, பைக் ட்ரிப், ஷாப்பிங், ஆன்மிகம், ஜிம் போன்ற பல விஷயங்களில் கவனம் செலுத்துகிறார்கள். இதற்கிடையில் இருவரின் வாழ்க்கையிலும் புதிய காதல் மலர்கிறது. எனினும் பழைய நினைவுகள் அவர்களை முழுமையாக முன்னேற விடாமல் தடுக்கின்றன. ஒரு கட்டத்தில் “திருமணமே இதற்கான தீர்வு” என எண்ணி, வேறு ஒருவரை திருமணம் செய்யத் தீர்மானிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் மீண்டும் இணைந்தார்களா அல்லது புதிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார்களா என்பது கதையின் மீதிப்பகுதி.
அஜயாக நடித்துள்ள நடிகர், இளைஞரின் துடிப்பையும், மனஅழுத்தத்தையும் நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். காதல் மற்றும் குழப்ப நிலைகளில் அவரது இயல்பான நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது. தனுஷாவாக நடித்துள்ள நடிகை கதைக்கு பலம் சேர்த்துள்ளார்; காதல் காட்சிகளில் உணர்ச்சி வெளிப்பாடு சிறப்பாக அமைந்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையின் காதல் மனநிலையை படமாக வடிவமைக்க முயன்றுள்ளார் இயக்குநர்.
கதையில் புதுமை குறைவாக உணரப்படுகிறது. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். விஜய் ஆண்டனி இசை பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. அதே நேரத்தில், ஒளிப்பதிவாளராக இருந்த கணேஷ் சந்திராவின் காட்சியமைப்பு படத்திற்கு பலமாக அமைந்துள்ளது.
