‘ரெட் லேபிள் ‘ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கல்லூரி காலகட்டத்தில் அடிதடி சம்பவங்கள் மற்றும் போலீஸ் வழக்குகள் உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கியிருந்த நாயகன் லெனின், கல்லூரி படிப்பை முடித்த பிறகு அந்த பழைய வாழ்க்கையை முற்றிலுமாக விட்டு விட்டு, தொழிலில் கவனம் செலுத்தி அமைதியான வாழ்க்கையை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவர் முன்பு படித்த கல்லூரியில் நடைபெறும் மாணவர் தலைவர் தேர்தல் காரணமாக, மீண்டும் அந்தக் கல்லூரிக்குள் செல்ல வேண்டிய சூழ்நிலை அவரை கட்டாயப்படுத்துகிறது.

அடிதடியை தவிர்த்து, அமைதியான முறையில் மட்டுமே செயல்பட வேண்டும் என்ற உறுதியுடன் கல்லூரிக்குள் நுழையும் லெனின், எதிர்பாராத விதமாக கல்லூரி வளாகத்திற்குள் ஒருவரை கொலை செய்து விடுகிறார். ஏற்கனவே சில குற்ற வழக்குகள் அவரது பெயரில் இருப்பதால், இந்த கொலை குற்றம் அவரது எதிர்காலத்தை முழுமையாக அழித்து விடும் என்பதைக் கருத்தில் கொண்டு, அதிலிருந்து தப்பிக்க தனது காதலியின் உதவியுடன் ஒரு திட்டத்தை வகுக்கிறார். இதற்கிடையில், கொலை செய்யப்பட்ட நபரை தேடி போலீசாரும், அவரது ஆதரவாளர்களும் கல்லூரி வளாகத்திற்குள் நுழைகிறார்கள். இறுதியில் லெனின் தனது திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி தப்பித்தாரா? அவர் யாரை, எதற்காக கொலை செய்தார்? என்பதே படத்தின் மீதமுள்ள கதை.

நாயகனாக நடித்துள்ள லெனின், இது அவரது முதல் படம் என்ற அடையாளம் தெரியாத அளவுக்கு இயல்பான மற்றும் நம்பகமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கல்லூரி மாணவராக இருந்த காலமும், அதன் பிந்தைய வாழ்க்கையும் என இரண்டு விதமான மனநிலைகளை, தோற்றத்திலும் நடிப்பிலும் தெளிவாக வேறுபடுத்திக் காட்ட முயன்றிருப்பது திரையில் நன்றாக வெளிப்படுகிறது.

நாயகியாக நடித்துள்ள அஸ்மின், தோற்றத்தில் பெரிதாக கவனம் ஈர்க்காதபோதிலும், அளவான மற்றும் கட்டுப்பட்ட நடிப்பின் மூலம் தனது கதாபாத்திரத்தை நேர்மையாக செய்திருக்கிறார். திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும் அவரது பாத்திரம், படத்தின் இறுதிக்கட்டத்தில் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கிறது. காமெடி கலந்த வில்லத்தனத்துடன் திரையில் தோன்றும் ஆர்.வி.உதயகுமார், தனது நடிப்பின் மூலம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளார். முனீஷ்காந்த் மற்றும் அனுமோகன் ஆகியோர் குறைந்த காட்சிகளில் வந்தாலும், தங்களுக்கான இடத்தை சரியாகப் பிடித்து மனதில் பதிய வைக்கிறார்கள்.

கல்லூரி பின்னணியில் அமைந்த கிரைம்–சஸ்பென்ஸ் திரில்லர் கதையை, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக எழுதியுள்ளார் பொன். பார்த்திபன். குறிப்பிட்ட பட்ஜெட்டிற்குள், புதுமுக நடிகர்களை கொண்டு எங்கும் தொய்வின்றி கதையை நகர்த்தியுள்ள இயக்குநர் கே.ஆர். வினோத், குறிப்பாக இரண்டாம் பாதியை எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக கையாண்டுள்ளார். ஒரே கல்லூரி வளாகத்தை மையமாகக் கொண்டு கதை நகர்ந்தாலும், வெவ்வேறு கேமரா கோணங்களை பயன்படுத்தி காட்சிகளுக்கு வேகம் மற்றும் விறுவிறுப்பை கூட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன். கைலாஷ் மேனின் இசை, பாடல்களாகவும் பின்னணி இசையாகவும் கதைக்கு துணையாக பயணித்து, படத்தின் சூழலை வலுப்படுத்துகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading