நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துத் 2024-ம் ஆண்டு வெளியான பிரம்மாண்ட திரைப்படம் ‘கல்கி 2898 ஏடி’. சுமார் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். உலகம் முழுவதும் வெளியான இப்படம், ரூ.1100 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்து, அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாகப் பதிவாகியது.
மகாபாரத யுத்தமான குருசேத்திரம் நடைபெற்றதற்கு சுமார் 6000 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு ‘கல்கி 2898 ஏடி’ உருவாக்கப்பட்டது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.
இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சில காரணங்களால் நடிகை தீபிகா படுகோன் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தீபிகா படுகோன் நடித்த ‘சுமதி’ கதாபாத்திரத்தில் நடிக்க ஆலியா பட், பிரியங்கா சோப்ரா, கியாரா அத்வானி, ராஷ்மிகா மந்தானா உள்ளிட்ட பல நடிகைகளின் பெயர்கள் பரிசீலனையில் இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது, அந்த முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
