விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரணபலி’. செப்டம்பர் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் குறித்து இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் பேசியபோது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த கொடூரங்களை தீவிரமான காட்சிகளுடனும், ஆழமான உணர்வுப்பூர்வமான கதையமைப்புடனும் இந்தப் படம் பதிவு செய்கிறது என்றார். குறிப்பாக, சர் ரிச்சர்ட் டெம்பிள் போன்ற உயரதிகாரிகளின் கட்டுப்பாட்டில் திட்டமிட்டு வறட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில், மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகள் மனதை நெகிழ வைக்கும் விதத்தில் சொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஹிட்லரின் இனப்படுகொலைகளைவிடவும் மோசமான அளவிலான உயிரிழப்புகள், இந்தியாவின் பொருளாதார வளங்கள் எவ்வாறு சுரண்டப்பட்டன என்பதுபோன்ற வரலாற்று உண்மைகள், இந்தப் படத்தில் வலுவாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் பேசப்படுகின்றன.
இந்த திரைப்படம் ஒரு பீரியட் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. 19-ஆம் நூற்றாண்டை பின்னணியாகக் கொண்டு உருவான இந்தக் கதை, 1854 முதல் 1878 வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற உண்மை வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 1850-களில் நடந்த பல உண்மைச் சம்பவங்கள், பொதுவாக வரலாற்றுப் புத்தகங்களில் பதிவு செய்யப்படாதவை. 1850 முதல் 1900 வரையிலான காலப்பகுதியில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் திட்டமிட்டு தவறாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த மறைக்கப்பட்ட சம்பவங்களும் பழி சுமத்தப்பட்ட மனிதர்களும் இந்தப் படத்தின் மையமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இது ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாற்றுப் படம் அல்ல என்றும், பாடநூல்களில் இடம்பெற்றுள்ள வரலாற்றை அப்படியே மீளச் சொல்லும் முயற்சியும் அல்ல என்றும் இயக்குநர் விளக்கினார். பல்வேறு உண்மைச் சான்றுகள், வாய்மொழி வரலாறுகள், காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மறைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தை சினிமா வடிவில் மீண்டும் உருவாக்குவதே இந்தப் படத்தின் முக்கிய நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.
