உலக நாயகன் கமல்ஹாசன், தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 173-வது திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால், இந்த கூட்டணியைச் சுற்றி திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தற்காலிகமாக ‘தலைவர் 173’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், முதலில் இந்த திரைப்படத்தை இயக்குவது சுந்தர்.சி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சில காரணங்களால் சுந்தர்.சி இந்தப் படத்தை இயக்குவதிலிருந்து விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து, ‘டான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, ‘தலைவர் 173’ படத்தை இயக்க உள்ளார் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்தப் படம் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஹாலிவுட்டில் வெளியான ‘தி அவுட்ஃபிட்’ திரைப்படத்தின் தழுவலாக இந்தப் படம் உருவாக இருப்பதாகவும், இதில் ரஜினிகாந்த் ஒரு தையல்காரர் (டெய்லர்) கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்தக் கதை 1970-களின் காலகட்டத்தை மையமாகக் கொண்டு அமைந்திருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணியில் தயாராகும் இந்த புதிய திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
