வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், அதேபோல் தான் என் வாழ்க்கையிலும் உள்ளது – -நடிகர் நகுல்

பெப்பர் மின்ட் நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில், ஜெயராம், விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குநர் சனில் இயக்கியுள்ள திரைப்படம் ‘காதல் கதை சொல்லவா’. இப்படத்திற்கு ஷரத் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஷாஜன் களத்தில் பணியாற்றியுள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் நகுல் நடித்துள்ள திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர் கூறியதாவது, இந்தப் படத்தின் தலைப்பை முதலில் கேட்டவுடனேயே அது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. காதல் இல்லாமல் வாழ்க்கையே இல்லை என்பதே என் எண்ணம். ‘பாய்ஸ்’ திரைப்படத்தில் நடிக்கும் போது தான் சினிமா தொழிலின் மீது, கலை மீது எனக்கு உண்மையான காதல் உருவானது. அதை நினைத்து பார்க்கும் போதெல்லாம் அந்த காதல் இன்னும் அதிகமாகிறது.

முதலில் என் அம்மா என்னை மிகுந்த அன்புடன் நேசித்தார்கள். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அம்மாவின் அந்த அன்பையும் நேசத்தையும் நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அதன் பின்னர், என் உடல் மீது எனக்கு ஒரு காதல் வந்தது. அதனால் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுப்பாட்டுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். அதேபோல், திருமணம் மற்றும் குழந்தை ஆகியவற்றின் மூலம் காதலுக்கு ஒரு புதிய அர்த்தம் கிடைத்தது. காதல் என்பது வாழ்க்கையின் அடிப்படை உணர்வுகளில் ஒன்றாகும்.

வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இயல்பானவை. எது எப்போது நடக்க வேண்டுமோ அது அப்போதுதான் நடக்கும், அதுவே என் வாழ்க்கையிலும் நடந்துகொண்டு இருக்கிறது. இந்தப் படத்தில் வித்தியாசமான கதைக்களம் உள்ளது. அதில் நான் இதுவரை செய்யாத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த கதையில் ஒவ்வொருவருக்கும் ஒரு காதல் கதை இருக்கிறது. அந்த வகையில், இந்தப் படத்தை அனைவரும் தங்களுடன் தொடர்புபடுத்திக் கொண்டு பார்க்க முடியும் என்று நகுல் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading