‘துருவ நட்சத்திரம்’ முதலில் வெளியாக வேண்டும் என்பதற்காகவே புதிய படங்களை இயக்காமல் காத்திருக்கிறேன் – இயக்குனர் கவுதம் மேனன்

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம், நீண்ட ஆண்டுகளாக வெளியாகாமல் நிலுவையில் இருந்து வருகிறது. பல்வேறு காலகட்டங்களில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டாலும், பின்னர் ஒவ்வொரு முறையும் படம் ஒத்திவைக்கப்பட்டு வந்தது. தற்போது கூட, இப்படம் எப்போது திரைக்கு வரும் என்பது தெளிவாக தெரியாத நிலை நீடித்து வருகிறது. இதற்கு காரணமாக உள்ள பைனான்ஸ் சிக்கல்களை சரிசெய்ய, தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் வெளியீடு குறித்து இயக்குநர் கவுதம் மேனன் விரிவாக பேசினார். அதில், “‘துருவ நட்சத்திரம்’ படத்தை ஆரம்பத்தில் சூர்யாவை வைத்து தான் தொடங்கினேன். பின்னர் சில காரணங்களால் விக்ரமை வைத்து முழுமையாக இயக்கி முடித்தேன். தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்ட படங்களில் ஒன்றாக ‘துருவ நட்சத்திரம்’ மாறியுள்ளது. ஆனால், பைனான்ஸ் தொடர்பான பிரச்சினைகளால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த நிதிச் சிக்கலை சரிசெய்ய பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டதாகவும், தற்போது இறுதிகட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்து வருவதாகவும் கவுதம் மேனன் கூறினார். இன்னும் இரண்டு வாரங்களுக்குள் புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில், தான் வேறு புதிய படங்களை இயக்கச் செல்ல முடியும் என்றும், ஆனால் ‘துருவ நட்சத்திரம்’ முதலில் வெளியாக வேண்டும் என்பதற்காகவே புதிய படங்களை இயக்காமல் காத்திருக்கிறேன் என்றும் அவர் கூறினார். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும் தான் தனக்கு இந்த நேரத்திலும் உந்துதலாக இருப்பதாகவும் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading