ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ என்ற பெயரில் ஒரு பயிற்சி பட்டறையை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயின்ற 34 மாணவர்கள் ஒன்றிணைந்து, தலா ஒரு சுயாதீன திரைப்படம் என மொத்தமாக 34 திரைப்படங்களை உருவாக்கி வருகின்றனர். இந்த முயற்சிக்கான அறிமுக விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. ஒரே பயிற்சி நிறுவனத்தில் பயின்ற 34 பேர், ஒரே நேரத்தில் 34 திரைப்படங்களைத் தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிகழ்வில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர்கள் பி.சி. ஸ்ரீராம், ரவி வர்மன், வரைகலை இயக்குநர் ட்ராட்ஸ்கி மருது, தயாரிப்பாளரும் திரைப்பட விமர்சகருமான தனஞ்ஜெயன், இயக்குநர்கள் ஞானராஜசேகரன், ஹரிஹரன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய மூத்த படத்தொகுப்பாளர் பி. லெனின், “ஏழு ஸ்வரங்கள் தெரிந்திருந்தால், உலகத்தில் எங்கு வேண்டுமானாலும் சென்று பேச முடியும். அதற்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. தமிழ் தெரிந்தாலே போதுமானது. இங்கு விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட ‘தி ஃபிலிம் ஸ்கூல்’ மாணவப் படைப்பாளிகளின் சுய விவர பட்டியலில், படைப்புகளுக்கான அதிகபட்ச பட்ஜெட் ரூ.50 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, ஒவ்வொரு படத்திற்குமான படப்பிடிப்பு நாட்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தற்போது, நாங்கள் அந்த படங்களை தொகுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். அவற்றைப் பார்க்கும்போது, குறிப்பிடப்பட்ட நாட்களுக்குள் முழு நீள திரைப்படங்களின் படப்பிடிப்பை இவர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்து வழங்கியிருப்பது ஆச்சரியமாக உள்ளது. நான் திரைத்துறையில் பணியாற்றத் தொடங்கி இது 61-வது ஆண்டு. இன்றும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். சினிமாவில் ஸ்கிரிப்ட் மிகவும் முக்கியமானது. அதேபோல் திரைக்கதையும் அவ்வளவு முக்கியம். எனவே, இளம் இயக்குநர்கள் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.
