தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஆரம்ப காலம் முதலே வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகராக அறியப்படுகிறார். தற்போது அவர், இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘கராத்தே பாபு’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
ரவி மோகனின் 34-வது திரைப்படமாக அமைந்துள்ள ‘கராத்தே பாபு’ படத்தை, ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ‘டாடா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்குகிறார். இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். நடிகர்கள் சக்தி வாசுதேவன், காயத்ரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ‘கராத்தே பாபு’ திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 11 மணிக்கு இப்படத்தின் டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
