‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் தயாள் பத்மநாபன், அடுத்து இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஆகும். சமூக மற்றும் அரசியல் பின்னணியில் உருவாகும் இந்தப் படம், அவரது முந்தைய படங்களைப் போலவே வித்தியாசமான கதைக்களத்துடன் அமைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
2எம் சினிமாஸ் சார்பில் கே.வி. சபரீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், சுப. வீரபாண்டியன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை கவிதா பாரதியும், இயக்குநர் தயாள் பத்மநாபனும் இணைந்து எழுதியுள்ளனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
இதுகுறித்து இயக்குநர் தயாள் பத்மநாபன் பேசுகையில், “இது ஒரு தீர்மானமான நம்பிக்கையிலிருந்து உருவான திரைப்படம். முழு படக்குழுவும் இந்தக் கதையின் மீது முழுமையான நேர்மையும் நம்பிக்கையும் கொண்டு பணியாற்றியுள்ளது. இந்தப் படம் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
