14-ஆம் நூற்றாண்டில் டில்லியை ஆண்ட துக்ளக், தேவகிரியை ஆண்ட அவரது தம்பி பல்வான், மதுரையை ஆண்ட தம்பானி ஆகிய ஆட்சியாளர்களால் வட தமிழகத்தில் ஆட்சி செய்த அரசர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டார்கள் என்பதை இந்தக் கதை விவரிக்கிறது. மதம் மாற மறுத்த பொதுமக்கள் எந்தெந்த கொடுமைகளை அனுபவித்தார்கள், அந்த அடக்குமுறைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடியவர்கள் யார், அவர்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் என்ன என்பதனை ரத்தம் தோய்ந்த வரலாற்றுப் பதிவாக சொல்லும் திரைப்படமாக ‘திரெளபதி 2’ உருவாகியுள்ளது.
அந்த காலகட்டத்தில் திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த வீர வல்லாளர் (நட்டி) என்ற மன்னரின் விசுவாசமான தளபதியாக இருந்த வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட்) என்பவரின் வீர வரலாறும் இந்தக் கதையின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. டில்லி மற்றும் மதுரை ஆட்சியாளர்களால் வல்லாளருக்கு பிரச்சனைகள் உருவாகும் போது, மன்னரின் உயிரைக் காக்க தன் உயிரையும் தியாகம் செய்யத் தயாரான கருட படையைச் சேர்ந்த வீரசிம்மன் அந்த சூழ்நிலையை எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே கதையின் முக்கிய தளம். மக்களை அவர் எப்படி காப்பாற்றுகிறார், அவருக்கும் அவரது மனைவி திரவுபதிக்கும் எதிரிகளால் என்னென்ன துன்பங்கள் நேர்கின்றன என்பதையும் கதை விரிவாக பேசுகிறது. உண்மையான வரலாற்றுடன் சிறிதளவு கற்பனை கலந்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த காலத்தில் நிலவிய அரசியல் சூழ்நிலை, டில்லி சுல்தான் துக்ளக்கின் பேராசை, அதை நிறைவேற்ற அவர் செய்த கொடூர செயல்கள், அவரது பிரதிநிதிகளாக தேவகிரி மற்றும் மதுரையில் ஆட்சி செய்த முஸ்லிம் மன்னர்களின் மனநிலை ஆகியவை படத்தில் தெளிவாக சித்தரிக்கப்படுகின்றன. அவர்களால் அப்பாவி மக்கள் மற்றும் இந்து அரசர்கள் அனுபவித்த துன்பங்கள், போர், சூழ்ச்சி, தண்டனை, துரோகம், வீரம் என பல்வேறு அம்சங்களை ‘திரெளபதி 2’ அழுத்தமாக பேசுகிறது.
வீர வல்லாளர் மன்னர் கதாபாத்திரத்திற்கு நட்டி மிகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார். அவரது நடை, உடை, ஆபரணங்கள் அனைத்தும் அந்த காலத்துக்கு ஏற்றவாறு அமைந்துள்ளன. வசன உச்சரிப்பில் இன்னும் சிறிது கவனம் செலுத்தியிருக்கலாம் என்றாலும், பக்திமானாக திகழ்ந்த இந்த மன்னர் திருவண்ணாமலை கோபுரத்தை கட்டிய வரலாறு மனதில் பதிகிறது. மாற்று மத ஆட்சியாளர்களால் அவருக்கு நேர்ந்த அவல நிலையும், கிடைத்த தண்டனையும் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.
வீரசிம்மன் என்ற தளபதி கதாபாத்திரத்தில் ரிச்சர்ட் காட்டிய நடிப்பு, சண்டைக்காட்சிகள், அரச விசுவாசம், எதிரிகளை புத்திசாலித்தனமாக அணுகும் விதம் ரசிக்க வைக்கிறது. இருப்பினும், அவரது உடை மற்றும் கெட்-அப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். திரவுபதியாக, வீரசிம்மனின் மனைவியாக வரும் ரக்ஷனா, தனது வீரத்துடன் செய்யும் செயல்களாலும், கிளைமாக்சில் வெளிப்படுத்தும் ஆவேசத்தாலும் மெய்சிலிர்க்க வைக்கிறார். ஒரு வீரத் தமிழ் பெண்ணாக அவர் சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
வில்லன்களாக வரும் டில்லி சுல்தான் (சிராக் ஜானி), மதுரை தம்பானி (தினேஷ் லம்பா), தேவகிரி சுல்தான் பல்வான் ஆகியோரின் நடிப்பும், அவர்கள் செய்யும் கொடூர செயல்களும், பேசும் வசனங்களும் உண்மையிலேயே அவர்கள்மீது கடும் கோபத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அளவுக்கு அவர்களின் நடிப்பு வலுவாக உள்ளது. அந்த காலத்தில் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமாக இருந்தார்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்ற மக்களையும் அரசர்களையும் எப்படியெல்லாம் துன்புறுத்தினார்கள், மத மாற்றங்கள் எவ்வாறு நடந்தன என்பதனை பல காட்சிகள் மூலம் இயக்குநர் மோகன்.ஜி விரிவாக சொல்லியுள்ளார்.
14-ஆம் நூற்றாண்டின் கோட்டைகள், படைகள், அரண்மனைகள், போர் காட்சிகள், கோயில்கள் ஆகியவற்றை கமலின் ஆர்ட் வொர்க் மற்றும் சுந்தரின் கேமரா வொர்க் தெளிவாகவும் அழகாகவும் காட்டுகிறது. ஆக்ஷன் சுந்தர் வடிவமைத்த சண்டைக்காட்சிகளும் ஓரளவு திருப்தி அளிக்கின்றன. பட்ஜெட் காரணமாக சில இடங்களில் ஏமாற்றம் இருந்தாலும், மொத்தமாக ஒரு பிரமாண்ட உணர்வை உருவாக்கியுள்ளனர். ‘திரெளபதி 2’ படத்தின் முக்கிய நோக்கம், அந்த நூற்றாண்டில் ஆட்சியாளர்கள் செய்த கொடூரங்கள், மக்களின் தவிப்பு, குறிப்பாக மதம் மாற கட்டாயப்படுத்திய சம்பவங்களை பதிவு செய்வதே. மதம் மாற மறுத்தவர்களை எப்படி மிரட்டினார்கள், மதம் மாறினால் வரி கட்ட தேவையில்லை என்று எவ்வாறு ஆசை காட்டினார்கள், மதம் மாற்ற அரசர்களையே எப்படிச் சித்ரவதை செய்தார்கள் என்பதனை பல வரலாற்று சம்பவங்களுடன் நெஞ்சை பதற வைக்கும் வகையில் சொல்லியிருப்பது மனதை கலங்க வைக்கிறது. ஒய்.ஜி. மகேந்திரன் இடம்பெறும் ஆன்மிக காட்சி மற்றும் அந்த ராமர் பாடல் பக்தி பரவசத்தை ஏற்படுத்துகிறது. ஜிப்ரானின் பின்னணி இசையும், எம்.கோனோ பாடலும் கதைக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன.
