வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ராய் லட்சுமி, ஆண்ட்ரியா, அஞ்சலி இணைந்து நடித்த திரைப்படம் ‘மங்காத்தா’. 2011ஆம் ஆண்டு வெளியான இந்த படம், அஜித்தின் 50வது திரைப்படமாக அமைந்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பாடல்கள் மற்றும் தீம் மியூசிக் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், ‘மங்காத்தா’ திரைப்படம் இன்று (ஜனவரி 23) மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்கள் மற்றும் ஊர்களில் இந்த மறுவெளியீட்டை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சென்னை நகரில், இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் பார்த்தார்.
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு, அஜித்தின் 64வது திரைப்படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்குகிறார். இது தொடர்பாக படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஆதிக், “பிப்ரவரி மாதம் முதல் அஜித் 64 படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். படம் தொடர்பான அறிவிப்புகள் ஒவ்வொன்றாக வெளியாகும். ‘குட் பேட் அக்லி’ முழுக்க முழுக்க ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படம். அஜித் 64 படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகும். இந்த படத்தில் புதிதாக நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
