தெலுங்குத் திரையுலகின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் கிருஷ்ண வம்சி. நடிகை ரம்யா கிருஷ்ணனின் கணவரான இவர், தெலுங்குத் திரையுலகில் ‘சிவா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். மேலும், ஹிந்தி திரையுலகிலும் சில சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மாவின் முன்னாள் உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
1995ஆம் ஆண்டு வெளியான ‘குலாபி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கிருஷ்ண வம்சி, அந்த படத்திற்காக ஆந்திர மாநில அரசின் நந்தி விருதை சிறந்த இயக்குநராக பெற்றார். இதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய ‘நின்னெ பெல்லடதா’, ‘சிந்தூரம்’ ஆகிய திரைப்படங்கள் சிறந்த தெலுங்கு திரைப்படங்களுக்கான தேசிய விருதுகளை வென்றன. இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து 1998ஆம் ஆண்டு வெளியான ‘அந்தப்புரம்’ திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றினார். அதன் பின்னர் சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு வெளியான ‘ரங்கமார்த்தாண்டா’ திரைப்படத்தில் மீண்டும் இளையராஜாவுடன் இணைந்தார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு, இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்த கிருஷ்ண வம்சி, “பொன்னான நாட்கள்… ‘சிவா’ திரைப்படத்தின் பின்னணி இசை உருவாகிக் கொண்டிருந்த போது, இசையின் கடவுள் இளையராஜா சார் பாம்பே லேபில், அப்போதைய பாம்பேயில் 1989ஆம் ஆண்டு… அவர் எனது கோரிக்கையை அன்புடன் ஏற்று, வாழ்நாள் நினைவாக அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார்… இது எனது மிகச் சிறந்த நினைவு” என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ராம்கோபால் வர்மா, “என்னிடத்திலும் ஒரு புகைப்படம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று கருத்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவும் அதனுடன் தொடர்புடைய கருத்துகளும் தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
