நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் ‘மங்காத்தா’. இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியானது. அஜித்தின் 50-வது திரைப்படமாக அமைந்த இந்த படம், வெளியான நாளிலேயே ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, அவரது முதல் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்தது.
தற்போது, இந்த திரைப்படம் நாளை மறுநாள் (ஜனவரி 23) மீண்டும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, ஆன்லைன் முன்பதிவு மூலமாக மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விஜய் நடித்த ‘கில்லி’ மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘படையப்பா’ திரைப்படங்கள் மறுவெளியீட்டிலும் வசூலைக் குவித்ததைப் போல, ‘மங்காத்தா’ திரைப்படமும் மீண்டும் திரையரங்குகளில் நல்ல வசூலை ஈட்டும் என திரையுலக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
