இயக்குநர் சுந்தர்.சி, நயன்தாராவை மையமாக வைத்து ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் நடிகர் விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், நேற்று இந்த படத்தின் புரோமோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
சுமார் 5 நிமிடங்கள் 41 விநாடிகள் ஓடக்கூடிய இந்த புரோமோ வீடியோவில், நடிகர் விஷால், தமன்னா, யோகி பாபு ஆகியோரின் முக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் விஷால், அமைதியான குணம் கொண்ட கணவராகவும், வீட்டில் வேலை செய்யும் நபராகவும் நடித்துள்ளார். அவரது மனைவியாக தமன்னா நடித்துள்ள நிலையில், யோகி பாபு சீரியல் நடிகர் போன்ற கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
வீடியோவில், தமன்னாவுக்கு விஷால் ஒரு அமைதியான, வீட்டுப்பணிகளில் ஈடுபடும் நபராகத் தான் தெரிகிறார். ஆனால், அவர் ஒரு அதிரடி ஆக்ஷன் நபர் என்பது அவருக்கே தெரியாதது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், விஷால் வீட்டில் மாணிக்கம் போலவும், வெளியே பாட்ஷா போலவும் இருக்கும் கதைக்களம் என்பதைக் குறிக்கும் விதத்தில் இந்த புரோமோ அமைந்துள்ளது.
இந்த திரைப்படத்திற்கு ‘புருஷன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆக்ஷன், காமெடி ஆகிய இரண்டும் கலந்த வகையில் இந்த புரோமோ வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஆம்பள’, ‘ஆக்ஷன்’, ‘மத கஜ ராஜா’ ஆகிய படங்களுக்கு பிறகு, நான்காவது முறையாக விஷால் – சுந்தர்.சி கூட்டணி அமைந்துள்ளது. இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.
