தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சிரஞ்சீவி, சமீபத்தில் அவர் நடித்த ‘மனா சங்கரா வர பிரசாத் காரு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்து மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, சிரஞ்சீவியின் 158வது திரைப்படத்தை கன்னட சினிமாவை சேர்ந்த கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை ‘வால்டர் வீரையா’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பாபி இயக்கவுள்ளார். தற்போது இந்த திரைப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது மேலும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு மகள் கதாபாத்திரம் முக்கியமாக இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கதாபாத்திரத்திற்கு இளம் நடிகை ஒருவரை தேர்வு செய்யும் முயற்சியில், நடிகைகள் கீர்த்தி ஷெட்டி மற்றும் அனஸ்வரா ராஜன் ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
