‘மண்டாடி’ படம் குறித்து விரிவாக பகிர்ந்த நடிகர் சூரி!

நடிகர் சூரி தற்போது நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மீனவ சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தைப் பற்றி சூரி விரிவாகப் பகிர்ந்துகொண்டுள்ளார். அவர் கூறியதாவது, ஜல்லிக்கட்டு போலவே படகு போட்டியும் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். மீனவ மக்களின் பண்பாடு, அடையாளம், வாழ்வியல் முறையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாக இந்தப் போட்டி நடைபெறுகிறது. அந்தப் பகுதிகளில் எந்த ஒரு திருவிழா அல்லது விசேஷ நிகழ்ச்சி நடந்தாலும், அதன் முக்கிய அம்சமாக இந்தப் படகு போட்டி கட்டாயம் இடம்பெறும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் நடைபெறும் பாய்மரப் படகு போட்டி மிகவும் பிரசித்தமானதாகும். இந்தப் போட்டியில் சுமார் 150 முதல் 200 வரை பாய்மரப் படகுகள் பங்கேற்கும். சுமார் 20 கடல் மைல் தொலைவு வரை நடுக்கடலில் இந்த ரேஸ்கள் நடைபெறும். நடுக்கடலில் 20 மைல்களுக்கு அப்பால், கொடியுடன் சில எல்லைப் படகுகளை நிறுத்தி வைத்திருப்பார்கள்.

போட்டியில் பங்கேற்கும் நமது படகு அந்த எல்லைப் படகைச் சுற்றி மீண்டும் கரையை நோக்கி திரும்பி வரும்போது, ஊரே ஒன்று திரண்டு நின்று அதனை உற்சாகமாகக் கொண்டாடும். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போட்டி சாதாரணமானதாக அல்ல. இந்தப் போட்டியில் பங்கேற்பவர்கள் உயிருடன் கரைக்கு திரும்பி வர வேண்டும் என்பதே மிகப் பெரிய சவாலாக இருக்கும். காரணம், பல நேரங்களில் படகுகள் கடலில் கவிழ்ந்து விடுவதும், சில சமயங்களில் போட்டியாளர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்படுவதும் உண்டு. மொத்தத்தில், இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே நடைபெறும் ஒரு கடினமான போட்டி என்று கூட சொல்லலாம். இந்த ரேஸில் மனிதனின் திட்டமிடல், அனுபவம் ஆகியவற்றை வெல்ல வேண்டியதுடன், கடலில் வீசும் காற்றின் வேகத்தையும் திசையையும் எதிர்த்து வெல்ல வேண்டிய சூழல் உருவாகும். இவ்வளவு சவால்கள் நிறைந்ததுதான் இந்தப் படகு போட்டி.

இந்தப் போட்டியில் ஒரு அணியில் ஆறு பேர் இடம்பெறுவார்கள். அந்த அணியின் தலைவரே ‘மண்டாடி’ என அழைக்கப்படுகிறார். கடலின் நீரோட்டம், நீரின் வாடை, காற்றின் வேகம் மற்றும் திசை ஆகியவற்றை சரியாக கணித்து முடிவு எடுப்பவர் அந்த கேப்டன் தான். அடிக்கும் காற்றில் படகை எந்தத் திசையில் செலுத்த வேண்டும், எப்போது திசையை மாற்ற வேண்டும் என்பதையெல்லாம் நன்கு அறிந்தவராக அவர் இருப்பார். இப்படிப் படகு போட்டியில் ஈடுபடும் மீனவர்கள், அவர்களின் வாழ்க்கை, தினசரி போராட்டங்கள், ஒருவருக்கொருவர் கொண்ட ஈடு இணையில்லா அன்பு, போட்டியின் தீவிரம் ஆகிய அனைத்தையும் மையமாக வைத்து ‘மண்டாடி’ திரைப்படம் உருவாகி வருகிறது என சூரி தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading