கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் 1975 முதல் 1979 வரை பயின்ற முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நினைவுகூரல் நிகழ்வில் அந்தக் கல்லூரியில் கல்வி கற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு, முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் காணொளி மூலம் உரையாற்றி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.
அவர் தனது உரையில், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு அனைவரும் மீண்டும் ஒன்றுகூடி சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் விஷயம் எனக் கூறினார். பழைய நண்பர்களை நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கும்போது ஏற்படும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை என்றும் தெரிவித்தார். இந்தக் கல்லூரியில் படித்த பலர் இன்று சமூகவாழ்வில் உயர்ந்த பதவிகளில், பெரிய பொறுப்புகளில் இருப்பது பெருமை அளிப்பதாகவும் கூறினார். அதற்கு உதாரணமாக சைலேந்திர பாபு, இறையன்பு போன்றவர்களை அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசுகையில், நாம் வாழ்க்கையில் முன்னேறி பெரியவர்களாகிய பிறகு, கணவன், அப்பா, தாத்தா, சார் என எத்தனை மரியாதையான பெயர்களால் அழைக்கப்பட்டாலும், பழைய நண்பன் பெயர் சொல்லி ‘டேய்’ என்று அழைக்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடாக முடியாது என்றார். தன்னிடம் எவ்வளவு வேலை இருந்தாலும், ஆறு மாதத்திற்கு ஒருமுறை பெங்களூரு சென்று, தன்னுடன் முன்பு பணியாற்றிய டிரைவர், கண்டெக்டர் போன்ற நண்பர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருப்பதாகவும் கூறினார்.
தொடர்ந்து அவர், ‘சிவாஜி’ என்ற தனது உண்மைப் பெயரையே தான் சில நேரங்களில் மறந்து விடுவதாகவும், பழைய நண்பர்கள் தன்னை ‘டேய் சிவாஜி’ என்று அழைத்து பேசும்போது ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்றும் கூறினார். நீங்கள் இப்போது ஒருமுறை சந்தித்துக் கொள்வதோடு நிறுத்தாமல், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து சந்தித்து உறவைப் பேணுங்கள். அது உங்கள் மனதுக்கும் வாழ்க்கைக்கும் புத்துணர்ச்சியைத் தரும் என ரஜினிகாந்த் தனது உரையில் தெரிவித்தார்.
