‘பட்டம் போலே’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். அதன் பின்னர் தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருவதால், தற்போது அவர் பிஸியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். சமீப காலத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘தி ராஜா சாப்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த சூழலில், ஒரு நேர்காணலில் ‘லோகா’ திரைப்படம் குறித்து மாளவிகா மோகனன் பேசிய கருத்துகள் இணையத்தில் பரவலாக கவனம் ஈர்த்துள்ளன. அவர் கூறுகையில், “மலையாள திரைப்படத் துறையில் ‘லோகா’ என்பது மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம். இதில் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் அபாரமான வெற்றியைப் பெற்று சாதனை படைத்தது. இதற்கு முக்கிய காரணம், தயாரிப்பாளர்கள் கல்யாணி மீது துணிச்சலுடன் நம்பிக்கை வைத்து முதலீடு செய்ததுதான்” என தெரிவித்தார்.
மேலும், பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்களில் பெண்களை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கவோ, அவர்களை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவோ தயங்குகிறார்கள் என்றும், இத்தகைய படங்களில் பெரும்பாலும் ஆண்களே கதையின் மையமாக இருப்பார்கள் என்றும் அவர் கூறினார். தற்போது மாளவிகா மோகனன் தமிழில் ‘சர்தார் 2’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
