‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை சதா, அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஒருகட்டத்தில், திடீரென திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட அவர், சினிமாவிலிருந்து சற்றே விலகி இருந்தார்.
பல ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, ‘டார்ச்லைட்’ திரைப்படத்தில் இதுவரை அவர் நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதன் பின்னர், சினிமா உலகத்திலிருந்து பெரும்பாலும் ஒதுங்கியுள்ள சதா, தற்போது புகைப்படக் கலைஞராக மாறி, வனவிலங்குகளின் அழகை புகைப்படங்களில் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சதா, சின்னத்திரை நடன நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிய கதைகளையும் அவர் கேட்டு வருகிறார் என கூறப்படுகிறது. இந்த தகவல் சினிமா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
