மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு ‘பேட்ட’ திரைப்படம் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதன் பின்னர் ‘மாஸ்டர்’, ‘தங்கலான்’ போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றார். தற்போது அவர் ‘சர்தார் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்த ‘தி ராஜா சாப்’ திரைப்படம் வெளியாகி பேசுபொருளானது.
சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகை மாளவிகா மோகனன் சில நடிகைகள் நடிப்பு குறித்து அலட்சியமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நீண்ட காலமாக நடித்துவரும் சில நடிகைகள், தங்களது வசனங்களை கூட முறையாக கற்றுக்கொள்ளாமல் நடிப்பதாக தெரிவித்தார். ஒரு காட்சியில் சோகம் அல்லது கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டிய சூழலில், அவர்கள் மனதிற்குள் ‘1, 2, 3, 4’ அல்லது ‘A, B, C, D’ என எண்ணிக்கொண்டு, முகபாவனையை மட்டும் வெளிப்படுத்துவார்கள் என்றும், டப்பிங் செய்யும் போது உதட்டு அசைவுகளுடன் வசனங்களை பொருத்திக் கொள்வார்கள் என்றும் கூறினார். இது ஒருமுறை மட்டும் நடைபெறும் விஷயம் அல்ல; பல நடிகைகள் வாழ்க்கை முழுவதும் இதே முறையில்தான் நடித்து வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ‘லோகா’ திரைப்படம் குறித்து பேசுகையில், அந்த படம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, மலையாள சினிமாவில் வசூல் சாதனை செய்ததாக கூறினார். பொதுவாக இத்தகைய பெரிய படங்களை தயாரிப்பாளர்கள் பெரிய நடிகர்களை வைத்து எடுப்பார்கள்; நடிகைகளை மையமாக வைத்து எடுக்கத் தயங்குவார்கள். ஆனால், இந்த படத்தின் தயாரிப்பாளர், நடிகை கல்யாணி மீது வைத்த நம்பிக்கையின் அடிப்படையில் இப்படத்தை உருவாக்கியுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். யார் அந்த நடிகைகள் என்பதைக் குறித்து மாளவிகா மோகனன் நேரடியாக குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
