நடிகை ஈஷா ரெப்பா தற்போது நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி’. இதில் நடிகர் தருண் பாஸ்கர் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்று வரும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈஷா ரெப்பா தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலின் போது, தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் சந்தித்த ஒரு சங்கடமான அனுபவத்தை அவர் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
ஒரு திரைப்படத்தின் தயாரிப்பாளர், அவரது புகைப்படங்களை மடிக்கணினியில் பெரிதாக்கி பார்த்துவிட்டு, முழங்கைகள் கூட கருமையாகத் தெரிகிறது என்றும், இன்னும் வெண்மையாக இருக்க வேண்டும் என்றும் கூறியதை அவர் நினைவு கூர்ந்தார். அந்த கருத்துகள் ஆரம்பத்தில் தன்னை மிகவும் காயப்படுத்தியதாகவும், அது மனச்சோர்வை ஏற்படுத்தியதாகவும் ஈஷா ரெப்பா தெரிவித்துள்ளார். பின்னர், அந்த அனுபவத்தை ஏற்றுக்கொண்டு தன்னை தானே வலுப்படுத்திக் கொள்ளக் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
