15 மாதங்களாக நான் யாரையும் சந்திக்க தயாராக இல்லை – நடிகை பாவனா டாக்!

தமிழ் சினிமாவில் ‘சித்திரம் பேசுதடி’, ‘வெயில்’, ‘கூடல்நகர்’, ‘வாழ்த்துகள்’, ‘ஜெயம் கொண்டான்’, ‘தீபாவளி’, ‘அசல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை பாவனா. அதேபோல் மலையாள திரையுலகிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக அவர் நீண்ட காலமாக வலம் வருகிறார்.

பாவனா கடந்த 2018ஆம் ஆண்டு நவீன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி, பிசியாக செயல்பட்டு வருகிறார். சுமார் ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, 2023ஆம் ஆண்டு வெளியான ‘என்டிக்காக்கக்கொரு பிரேமண்டார்ன்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் மலையாள திரையுலகுக்கு அவர் திரும்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நடிகை பாவனா தனது மனநிலையைப் பற்றி பேசுகையில், “எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்பது எனக்கு ஒரு வகையில் கெட்ட பழக்கமாகவே மாறியுள்ளது. நான் எப்போதும் சிரித்துக் கொண்டே, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தொடர்ந்து இருந்து வருகிறது. பிரச்சினைகளை சந்திக்கும் நேரங்களிலும், கேமரா முன் நிற்கும் போது மகிழ்ச்சியாக இருக்க அதிகமாக முயற்சி செய்கிறேன்.

கடந்த 15 மாதங்களாக நான் என் பாதுகாப்பு வளையத்துக்குள் தான் இருந்தேன். பொதுமக்களை சந்திக்க நான் தயாராக இல்லை. என் குடும்பத்தினரையும், நெருங்கிய நண்பர்களையும் மட்டுமே சந்தித்து வந்தேன். சிரிக்க வேண்டுமா, வேண்டாமா என்பதே சில நேரங்களில் எனக்குத் தெரியாமல் போனது. ஆனால் எல்லா நேரங்களிலும் அந்த மனநிலையில் இருக்க முடியாது. இப்போது எனது படம் வெளியாக போகிறது. அந்த படத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading