மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்டு காயப்படுத்த வேண்டாம் – நடிகர் அஸ்வின் குமார்

விக்னேஷ் கார்த்திக் இயக்கி, அவரே நடித்துள்ள ‘ஹாட்ஸ்பாட் 2’ திரைப்படம் நாளை மறுநாள் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பிரியா பவானி சங்கர், பவானிஸ்ரீ, அஸ்வின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யாவும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், “நான் கதை கேட்க ஆரம்பித்தாலே தூங்கிவிடுவேன். சுமார் 40 கதைகள் கேட்டு அப்படியே தூங்கியிருக்கிறேன்” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கதை சொல்ல வருபவர்களை அவமதிக்கும் விதமாக இந்த பேச்சு அமைந்துள்ளதாக பலரும் விமர்சித்ததுடன், சமூக வலைத்தளங்களில் அவரை கடுமையாக ட்ரோல் செய்தனர்.

இந்த நிலையில், ‘ஹாட்ஸ்பாட் 2’ திரைப்படத்திலும், “கதை கேட்டால் எனக்கு தூக்கம் வரும்” என்று அவர் நண்பர் பேசுவது போன்ற ஒரு டயலாக் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, சென்னையில் நடைபெற்ற படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், “இப்போது கதை கேட்டால் நீங்கள் தூங்கிவிடுகிறீர்களா, இல்லையா விழித்திருக்கிறீர்களா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அஸ்வின், “அப்போது நான் சொன்ன 40 என்ற எண்ணிக்கை பொதுவாக சொன்னது தான். அதற்கு அதிகமாகவும் கதை கேட்டிருக்கலாம், குறைவாகவும் கேட்டிருக்கலாம். நீங்க கதை கேட்டால் தூங்காமல் இருப்பீர்களா? படம் பார்க்கும்போதே தூங்குகிறீர்களே, அதை நான் தியேட்டரிலேயே பார்க்கிறேன்.

நான் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பேச்சை சொல்லவில்லை. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகே விளக்கம் அளித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுவிட்டேன். இப்போது மீண்டும் அதே கேள்வியை கேட்பது, என்னை குத்துவது, காயப்படுத்துவது போல தான் இருக்கிறது” என்று தனது மனவருத்தத்தை வெளிப்படுத்தினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading