தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்று, திரையரங்குகளில் தொடர்ந்து நல்ல வசூலை குவித்து வருகிறது. இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் சமூக பொறுப்புணர்வுடன் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து ‘பிரக்ருதி’ என்ற யானையை தத்தெடுத்துள்ளார்.
இந்த யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை அடுத்த 6 மாதங்களுக்கு முழுமையாக சிவகார்த்திகேயன் ஏற்றுக் கொள்வார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் நடிகர்கள் முன்வந்து செயல்படுவது பாராட்டுக்குரியது என்று பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு சிங்கத்தையும், ஒரு புலியையும் சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த செயல் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது.
