சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கருப்பு’. இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வருகிற மே 14-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படம் தொடர்பாக இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அப்படியான ஒரு பேட்டியில், “எந்த இயக்குநரின் திரைப்பயணம் உங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஆர்.ஜே.பாலாஜி, “பல இயக்குநர்களின் பயணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் ஆர்.ஜேவாக இருந்த காலத்தில் சினிமா விமர்சனங்கள் செய்து வந்தபோது ‘ராஜா ராணி’ திரைப்படத்தை நகைச்சுவையாக விமர்சித்திருக்கிறேன். ஆனால் அந்த காலத்தில் நான் பார்த்த அட்லீயையும், தற்போது அவர் அடைந்துள்ள உயரத்தையும் பார்க்கும்போது மிகவும் உத்வேகமாக இருக்கிறது. விஜய் சாரை வைத்து ‘தெறி’ திரைப்படத்தை இயக்கியபோது, ஒரு புதுமுக ஒளிப்பதிவாளரை வைத்து படம் எடுக்க அவர் காட்டிய நம்பிக்கை என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. அதேபோல் ஷாருக்கான் நடித்த திரைப்படத்தை அவர் இயக்கிய விதமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த திரைப்படம் 1,000 கோடி வசூல் செய்தது என்பது மட்டுமல்ல, அது ஏற்படுத்திய தாக்கமே மிகப்பெரியது. தற்போது அவர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படம் இயக்கி வருகிறார்” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், “அட்லீ மீது பல்வேறு விமர்சனங்களும் கிண்டல்களும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. அவர் இந்த படத்திலிருந்து எடுத்தார், அந்த படத்திலிருந்து எடுத்தார் என்று பலரும் கூறினாலும், இறுதியில் அந்த திரைப்படத்தின் வெற்றியைத்தான் அனைவரும் பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியை கொடுக்க எவ்வளவு மன வலிமையும் தன்னம்பிக்கையும் தேவை என்பதை யோசிக்க வேண்டும். அவரை விமர்சித்தவர்களுக்கு அவர் எந்த பதிலும் சொல்லாமல், தனது வேலையின் மூலம் மட்டுமே பதில் அளித்து வருகிறார். அட்லீ எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கிறார். அவர் கற்பனை செய்யும் கதையை மற்றவர்களையும் நம்ப வைக்கும் திறமை கொண்டவர். வெளியிலிருந்து பார்க்கும்போது அது மிகவும் எளிதாக தோன்றலாம். ஆனால் அந்த இடத்தில் இருப்பவருக்குத்தான் அதன் சிரமம் முழுமையாக புரியும்” என்று தெரிவித்தார்.
