ஜி.வி. பிரகாஷ் குரலில் திருவாசகத்தின் முதல் பாடல், வரும் ஜனவரி 22ம் தேதி வெளியீடு!

டெல்லியில் மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், திருவாசகத்தை பாடி அனைவரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தினார். அவரது இந்த ஆன்மிகப் பாடல் நிகழ்ச்சி, நிகழ்வில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது.

திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க வேண்டும் என்பது ஜி.வி. பிரகாஷின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்துள்ளது. அந்த கனவை நடைமுறைப்படுத்தும் முதல் படியாக, திருவாசகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலக மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் தற்போது அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரிய ஆன்மிக பாடல்களை இன்றைய தலைமுறையினரும் எளிதாக உணர்ந்து ரசிக்கும் வகையில், இசை வடிவமைப்பில் புதிய அணுகுமுறையை அவர் பயன்படுத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

பிரதமர் மோடி ரசித்ததாக கூறப்படும் ஜி.வி. பிரகாஷ் குரலில் அமைந்த திருவாசகத்தின் முதல் பாடல், வரும் ஜனவரி 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த பாடல் அவரது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் முழு ஆல்பமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இசையமைப்பாளர் இளையராஜா, திருவாசகத்தை சிம்பொனி வடிவிலான ஆல்பமாக 2005ஆம் ஆண்டு இசையமைத்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading