பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் அக்ஷய் குமார். தென்னிந்திய மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்ற பல படங்களின் ஹிந்தி ரீமேக்குகளில் தொடர்ந்து நடித்தவர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவிலான வெற்றியைப் பெறவில்லை. அதில் சில படங்கள் மட்டுமே வர்த்தக ரீதியாக ஓடியுள்ளன.
வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும், தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் நடிகராக அக்ஷய் குமார் திகழ்கிறார். அவர் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான ‘ஜாலி எல்எல்பி 3’ திரைப்படம் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதனைத் தொடர்ந்து, அவர் மேலும் சில ஹிந்தி படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சங்கராந்திகி வஸ்துனம்’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் தெலுங்கில் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ‘வாரிசு’ படத்தின் தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு இந்த ஹிந்தி ரீமேக்கை தயாரிக்க உள்ளதாகவும், இதில் அக்ஷய் குமாருடன் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த ஆண்டு சங்கராந்திக்கு தெலுங்கில் வெளியான இரண்டு படங்களுக்கு இசையமைத்த பீம்ஸ் செசிரோலியோ, இந்த ஹிந்தி ரீமேக் படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கப்பட உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
