பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி விஜய் நடித்த கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் மற்றும் ஸ்ரீலீலா நடித்த ‘பராசக்தி’ திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிப்பு வெளியானது. அதன்படி ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் வெளியாகி விட்டது. ஆனால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்சினைகளால் குறிப்பிட்ட தேதியில் வெளியாகவில்லை.
இந்த சூழலில், விஜய் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ‘India Today’ ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் பேசுகையில், “எனக்கு விஜய் சார் ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. இதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதனை நான் விஜய் சாரிடமே நேரடியாக சொல்லியிருக்கிறேன். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் செய்யும் திட்டம் இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இசை வெளியீட்டு விழாவிலேயே, விஜய் சாரின் ‘ஜனநாயகன்’ படத்தை நான் FDFS-ல் பார்ப்பேன் என்று தெளிவாக கூறியிருந்தேன். அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்சார் போர்டு எடுத்த முடிவு தவறானது. எந்த ஒரு படத்துக்கும் இதுபோன்ற விஷயங்கள் நடக்கக்கூடாது.
‘ஜனநாயகன்’ படத்துடன் நாங்கள் போட்டி போட வேண்டும் என்ற எண்ணமே எங்களுக்கு இல்லை. பண்டிகை விடுமுறை எங்களுக்கும் தேவையாக இருந்தது. அவ்வளவுதான்” என்று சுதா கொங்கரா விளக்கமாக கூறியுள்ளார்.
