இசையமைப்பாளர் இளையராஜா கலைத் துறையில் செய்த அபார சாதனைகளுக்காக ‘பத்மபாணி’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மஹாராஷ்டிராவில் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் மற்றும் மஹாராஷ்டிரா அரசு இணைந்து ஆண்டுதோறும் ‘அஜந்தா – எல்லோரா’ சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. இந்த விழாவில் கலைத் துறையில் வாழ்நாள் முழுவதும் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு ‘பத்மபாணி’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ‘அஜந்தா – எல்லோரா’ சர்வதேச திரைப்பட விழா ஜனவரி 28ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 4ஆம் தேதி வரை மஹாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடைபெற உள்ளது.
இந்த விழாவின் தொடக்க நாளான ஜனவரி 28ஆம் தேதி, ராஜ்யசபா உறுப்பினரும் இசையமைப்பாளருமான இளையராஜாவுக்கு ‘பத்மபாணி’ விருது வழங்கப்படும் என்று விழா குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த விருதுடன் நினைவுப்பரிசு, பாராட்டு பத்திரம் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்கு முன்பு பாடலாசிரியர் ஜாவித் அக்தர், இயக்குநர்-எழுத்தாளர் சாய் பரன்ஜ்பே, நடிகர் ஓம் புரி உள்ளிட்டோர் இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
