நடிகர் அஜித்குமார், ‘குட்பேட் அக்லி’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.இதற்கிடையில், சினிமாவுக்கு அப்பாற்பட்டு கார் பந்தயத்திலும் அஜித் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு அபுதாபி, பார்சிலோனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில், தனது ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியுடன் அவர் கலந்து கொண்டார். தற்போது, 24 ஹெச் சீரிஸ் – மத்திய கிழக்கு டிராபிக்கான பந்தயத்தில் அவர் பங்கேற்று வருகிறார்.
துபாயில் நடைபெறும் இந்த போட்டிகளின் போது, அஜித்தை பல திரை பிரபலங்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் அவரை சந்தித்திருந்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சிபிராஜ், இயக்குநர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா தம்பதியினர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் ஆகியோரும் அஜித்தை நேரில் சந்தித்துள்ளனர்.
இதனிடையே, அஜித் அணியின் கார் போட்டியின்போது விபத்துக்குள்ளானது. போட்டியில் பங்கேற்ற கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதால், காரை ஓட்டிச் சென்ற வீரர் அயர்டன் ரெடான்ட் உடனடியாக காரை நிறுத்தி வெளியேறினார். பின்னர் தீயணைப்பு உபகரணங்கள் மூலம் தீ கட்டுப்படுத்தப்பட்டது. முன்னதாகவும், அஜித் அணியின் கார்கள் இதுபோன்ற விபத்துகளை சந்தித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அஜித்குமார் கூறுகையில், “எனக்கு ஆதரவு அளிக்க திரண்டு வந்த ரசிகர்கள், நான் ரேஸ் ஓட்டுவதையும் எங்கள் அணி பரிசு வெல்வதையும் நேரில் பார்க்க முடியாதது வருத்தமாக உள்ளது. என் ரசிகர்களுக்கு சத்தியமாக சொல்கிறேன், நல்ல காலம் காத்திருக்கிறது. நானும் என் அணியும் நிச்சயம் ஒருநாள் அவர்களை நிச்சயம் பெருமைப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
