‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தில் அந்த வசனம் யாரையும் காயப்படுத்த பேசவில்லை… நடிகர் ஜீவா விளக்கம்!

நடிகர் ஜீவா கதையின் நாயகனாக நடித்துள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இந்த படத்தில் தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மலையாள இயக்குநர் நிதேஷ் சஹாதேவ் இயக்கியுள்ளார். அரசியல் கலந்த நகைச்சுவை கதைக்களத்தில் உருவான இந்த திரைப்படம், வெளியான முதல் நாளிலிருந்தே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்துள்ளார். ஒரு திருமணத்தின் பின்னணியில், காமெடியுடன் கூடிய முழு பொழுதுபோக்கு படமாக ‘தலைவர் தம்பி தலைமையில்’ உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து படத்தின் பிரச்சார பணிகளின் ஒரு பகுதியாக, படக்குழு பல்வேறு ஊர்களில் தியேட்டர் விசிட் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஒரு ஊரில் தியேட்டர் விசிட் முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகர் ஜீவாவிடம் படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதாவது, கரூர் துயர சம்பவத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ் கண்ணீருடன் பேசிய “படிச்சு படிச்சு சொன்னனேடா, கண்டிஷன்ஸ பாலோ பண்ணுங்கடா பண்ணுங்கடான்னு… கேட்டீங்களா என்ற வசனம், படத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த வசனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றாலும், அதே நேரத்தில் சில விமர்சனங்களையும் சந்தித்தது.

இதற்கு பதிலளித்த ஜீவா, டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களுக்கு ஏற்ற மாதிரியே நாங்கள் படத்தில் சில விஷயங்களை கையாளுகிறோம். அந்த இடத்தில் அந்த வசனம் பொருத்தமாக இருக்கும் என்று இயக்குநர் கூறினார். நானும் அதை அந்தக் கதாபாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப பேசிவிட்டேன். அதற்கு மக்களிடமிருந்து நல்ல வரவேற்பும் கிடைத்தது. யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கில்லை. இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக மட்டுமே எடுக்கப்பட்ட படம் என்று விளக்கம் அளித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading