நடிகர் அர்ஜுன் தாஸ், தமிழ் சினிமாவில் ‘மாஸ்டர்’, ‘கைதி’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே தனித்த அடையாளம் பெற்றவர். அதன் பின்னர் கதாநாயகனாகவும் முன்னேறி, ‘அநீதி’, ‘ரசவாதி’ போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிற மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அர்ஜுன் தாஸ் நடித்த ‘போர்’, ‘ரசவாதி’, ‘பாம்’ ஆகிய படங்கள் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் தற்போது புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அன்னா பென் நடித்துள்ளார். மேலும் வடிவுக்கரசி, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் உணர்ச்சிகளை மையமாகக் கொண்டு உருவாகும் கதைக்களம் கொண்ட இப்படம், அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மங்களூரு, சென்னை, மும்பை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில், இதுவரை சுமார் 80 சதவீத படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த சூழலில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு ‘கான்சிட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து பாடல்கள், டிரெய்லர் மற்றும் திரைப்பட வெளியீடு குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
