யாராக இருந்தாலும் பெரியாருக்கு எதிராக பேசுவதாலயே பிரபலம் ஆக முடியாது – இயக்குனர் மாரி செல்வராஜ்!

சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், பெரியாரின் சிந்தனைகள் தன்னுள் ஆழமாக பதிய காரணமானவர் தனது மனைவிதான் என்று கூறினார். வீட்டிற்கு சென்றால் அங்கு பெரியார் தொடர்பான புத்தகங்களே அதிகமாக இருக்கும் என்றும், அந்த சூழல் ஆரம்பத்தில் தனக்கு புதுமையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். அப்போது அது காலத்தின் கட்டாயம் என்று புரிந்து கொள்ளவில்லை என்றும், தாம் ஏன் அந்த வீட்டிற்குள் சென்றோம் என்பதே தெரியாமல் இருந்ததாகவும் அவர் நினைவுகூரினார். நீங்கள் நம்ப மாட்டீர்கள், நாங்கள் இருவருமே சாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள் என்று அவர் கூறினார். எந்தவித தடையும் இல்லாமல் அந்த வீட்டிற்குள் சென்றதாகவும், அதைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டதாகவும் அவர் பகிர்ந்தார். ‘உன்னை எப்படி அந்த வீட்டிற்குள் அனுமதித்தார்கள்?என்று பலர் கேட்டதாகவும், காரணம் அந்த வீட்டில் பெரியாரின் சிந்தனை ஆழமாக இருந்ததாகவும் அவர் விளக்கினார்.

நெல்லையில் வளர்ந்த ஒரு சாதாரண கிராமத்து பையனுக்கு, சேலத்தில் பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்தார்கள் என்று கூறிய மாரி செல்வராஜ், தாம் அப்பா, அம்மா, நண்பர்கள் என யாரையும் அழைத்து பெண் கேட்கச் செல்லவில்லை என்றும் தெரிவித்தார். ஒரு பெரிய யுத்தத்திற்கு செல்லும் அளவுக்கு மனதளவில் தயாராகிக் கொண்டுதான் சென்றதாகவும், எப்படி பேச வேண்டும், எப்படி அமைதியாக இருக்க வேண்டும், எப்படி சூழ்நிலையை சமாளிக்க வேண்டும் என்பதெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டதாகவும் கூறினார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் அமர்ந்து பார்த்த போது, அங்கு பெரியாரின் படம் மாட்டியிருந்ததை பார்த்ததும் ‘தப்பித்தோம்’ என்று நினைத்ததாகவும், அன்றிலிருந்து அந்த வீடு தன்னுடைய வீடாகவே மாறிவிட்டதாகவும் அவர் உருக்கமாக பேசினார்.

பெரியாரைப் பற்றி தற்போது படித்து வைத்து பேசினாலும், இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து அதைவிட சிறப்பாக பேச முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக மாரி செல்வராஜ் கூறினார். பெரியாரை எதிர்த்தே பேசுவதன் மூலமே ஒருவர் பிரபலமாக முடியும் என்றும், அதனால் நல்ல பேச்சாற்றல் வளர வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதுவே பெரிய தன்னம்பிக்கையை உருவாக்கும் என்றும் அவர் சொன்னார். அதனால் கிடைக்கும் பாராட்டுகளும் அதிகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அந்த தன்னம்பிக்கையும், மன உறுதியும் என்ன செய்யும் என்றால், நாம் யாரிடமிருந்து கற்றுக் கொண்டோமோ அவர்களைப் பற்றி பேசும் போதே நம்மால் ஒரு பெரிய மனிதராக மாற முடியும் என்று அவர் விளக்கினார். ஆசானை மீற வேண்டும் என்பதன் அர்த்தம் அவர்களை குறை சொல்ல வேண்டும் என்பதல்ல என்றும், மாறாக ஆசான் உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதே உண்மையான வளர்ச்சி என்றும் கூறினார். பெரியாரை திட்டுவதாலேயே ஒருவர் பெரிய சிந்தனையாளராக மாற முடியாது என்றும், அவரை உணர்ந்து கொண்டு, அவர் உருவாக்க விரும்பிய சமூக நீதி மற்றும் கருத்துச் சுதந்திரத்தை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களிடம் நாம் எதை கொடுக்கிறோம் என்பதே முக்கியம் என்றும், வன்மம், பிரிவினை, வெறுப்பு போன்ற உணர்வுகளை விதைப்பது எந்த விதத்திலும் சாதனை அல்ல என்றும் மாரி செல்வராஜ் தனது உரையை முடித்தார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading