இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பாலிவுட் திரைத்துறை குறித்த தனது அனுபவங்களையும் கருத்துகளையும் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர், பாலிவுட் திரையுலகில் படைப்பாற்றல் இல்லாத சில நபர்களின் கைகளில்தான் அதிகாரம் இருப்பதாக கூறியுள்ளார். முடிவெடுக்கும் இடங்களில் அவர்களே இருப்பது தான் பல பிரச்சனைகளுக்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் இருப்பதாக தனக்கு செவி வழி செய்திகள் கிடைத்ததாக தெரிவித்தார். ஆனால், தனது முகத்திற்கு நேராக அத்தகைய அனுபவங்களை அவர் சந்திக்கவில்லை என்றும் கூறினார். வேலை வாய்ப்புக்காக யாரையும் தேடி செல்லும் பழக்கம் தனக்கு இல்லை என்றும், தனது வேலையின் நேர்மையும் தரமும் தான் வாய்ப்புகளை தானாகவே தேடித் தரும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் ஏ.ஆர். ரஹ்மான் கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் தனது ஆரம்ப கால அனுபவங்கள் மிக இனிமையானதாக இல்லை என்றும் அவர் பகிர்ந்துள்ளார். தன்னால் பாலிவுட்டில் இசையமைக்க தொடங்கிய காலத்திற்கு முன்பாக, எந்த தென்னிந்திய இசையமைப்பாளரும் அங்கு பெரிதாக இசையமைத்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இளையராஜா சில திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தாலும், அதற்கு பிறகு வேறு யாரும் அந்த வாய்ப்பைப் பெறவில்லை என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
1990-களில் ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘தில் சே’ போன்ற திரைப்படங்கள் புகழ் பெற்றாலும், ‘தால்’ திரைப்படம்தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் தனது இசையை கொண்டு சென்ற படம் என ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார். அந்த காலகட்டத்தில் தனக்கு இந்தி மொழி பேசத் தெரியாது என்றும், ஒரு தமிழராக தமிழ்மொழி மீது உள்ள ஆழ்ந்த பற்று காரணமாக இந்தி கற்றுக்கொள்வது சிரமமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் சுபாஷ் கய் தன்னிடம், உனது இசை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்திருக்க வேண்டும் என்றால், இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும், அதற்கு பதிலாக தான் இந்தி மட்டுமல்லாமல், இந்தி இசையின் தாயாக கருதப்படும் உருது மொழியையும் கற்றுக்கொள்ள முடிவு செய்ததாகவும் ஏ.ஆர். ரஹ்மான் அந்த பேட்டியில் மனம் திறந்து பகிர்ந்துள்ளார்.
