ரீ ரிலீஸில் மோதும் விஜய்யின் ‘தெறி’ – அஜித்தின் ‘மங்காத்தா’

இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ திரைப்படத்தில், விஜய்யுடன் இணைந்து சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். வெளியானதும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இதே திரைப்படம் ஹிந்தியில், நடிகர் வருண் தவான் நடிப்பில் ‘பேபி ஜான்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தில் நடிகர் அஜித், நீண்ட காலத்திற்குப் பிறகு நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தனது திரை வாழ்க்கையில் ஒரு சிறிய பின்னடைவை எதிர்கொண்ட நிலையில், ‘மங்காத்தா’ படம் நடிகர் அஜித்துக்கு மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது. இதற்கு முக்கிய காரணமாக அஜித்தின் கதாப்பாத்திர வடிவமைப்பும், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் அமைந்தது. கதாநாயகனாக அஜித்தை கொண்டாடிய ரசிகர்களை, வில்லனாகவும் உற்சாகமாக கொண்டாட வைத்த திரைப்படமாக ‘மங்காத்தா’ அமைந்தது. இந்த ‘மங்காத்தா’ திரைப்படம் வரும் 23 ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி நடிகர் விஜய் நடித்த ‘தெறி’ திரைப்படமும் ரீ-ரிலீஸாகும் என அதன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அறிவித்துள்ளார். ‘தெறி’ படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் நாளை வெளியாக உள்ளது. ஒரே நாளில் அஜித்தின் ‘மங்காத்தா’ மற்றும் விஜய்யின் ‘தெறி’ ஆகிய இரண்டு பிரபல திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால், அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading