விவசாயத் துறைக்காக உழைக்கும் மனிதர்கள் மற்றும் அமைப்புகளை கௌரவித்து அங்கீகரிக்கும் நோக்கில் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் வழங்கப்படும் ‘உழவர் விருதுகள்’ விழா 7-வது ஆண்டாக சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனருமான கார்த்தி, நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இதனுடன் பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில் மற்றும் அனந்து ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.
இந்த விழாவில் சிறந்த விவசாயி விருது கோவில்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாளுக்கும், சிறந்த வேளாண் பங்களிப்பு விருது மதுரையைச் சேர்ந்த பாமயனுக்கும், சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது வேலூர் மக்கள் நலச்சந்தைக்கும் வழங்கப்பட்டது. அதேபோல், நீர்நிலைகள் மீட்டெடுத்தலுக்கான சிறந்த பங்களிப்பு விருது திருப்பூரைச் சேர்ந்த ‘வேர்கள்’ அமைப்புக்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான விருது குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’ அமைப்பிற்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விருது பெற்ற அனைவருக்கும் சான்றிதழ், கேடயம் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கப்பட்டது.
விழாவில் உரையாற்றிய கார்த்தி, “விவசாயிகளை இந்த சமூகம் பெரிதாகக் கவனிப்பதில்லை; அவர்களுக்கு உரிய அங்கீகாரமும் வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கான மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. ஆனால், விவசாயிகளின் உழைப்பு மட்டும் ஒருபோதும் நின்றுவிடவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் விவசாயத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படுபவர்களை கொண்டாடி, இந்த சமூகத்துக்கு அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து இந்த உழவர் விருதுகளை வழங்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
