தமிழில் நடிகர்கள் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்’. இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில் உருவான இந்த படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. பேண்டஸி காமெடி ஜானரில் உருவான இந்த திரைப்படத்தை ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இரும்பொறை எனும் மன்னனுக்கு சொந்தமான மரகத நாணயத்தை கைப்பற்ற முயலும் கதையை மையமாக வைத்து, நகைச்சுவை கலந்த திரைக்கதையாக இந்த படம் உருவாக்கப்பட்டது. அந்த மரகத நாணயத்தை அவர்கள் இறுதியில் கைப்பற்றினார்களா இல்லையா என்பதே படத்தின் முக்கிய கதையாக அமைந்திருந்தது.
இந்த படத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பை தொடர்ந்து, இரண்டாம் பாகம் உருவாகும் என இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் ஏற்கனவே அறிவித்திருந்தார். முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் தயாரித்து வருகிறது. இதில் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ‘மரகத நாணயம் 2’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில், அதன்படி இன்று ‘மரகத நாணயம் 2’ படத்தின் புரோமோ வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
