ராம் இயக்கத்தில் நிவின் பாலி – சூரி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’… அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ்!

‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’ உள்ளிட்ட எதார்த்தமான வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் ராம். வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து படங்களை இயக்கி வரும் இவர், தற்போது ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் நிவின் பாலியை கதாநாயகனாக வைத்து ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளை பெற்றுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், 46-வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த ஆண்டில் அந்த விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றுள்ளது.

இதற்கு முன்பாக ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், தற்போது ரொமேனியா நாட்டில் நடைபெறும் ட்ரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. தனித்துவமான காட்சியமைப்புகள் மற்றும் புதிய முயற்சிகளுடன் உருவாகும் திரைப்படங்களை கொண்டாடும் ‘நோ லிமிட்’ என்ற பிரிவில் ‘ஏழு கடல் ஏழு மலை’ இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு டீஸர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading