‘ஜனநாயகன்’ விஜய் சாரின் மிகப்பெரிய மாஸ் படமாக இருக்கும்… இயக்குநர் எச்.வினோத் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

தமிழக முதல்வர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ’ திரைப்படம் ‘ஜனநாயகன்’ இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், பல்வேறு தடைகளை கடந்து வரும் ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் எச். வினோத், ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “படம் இணையத்தில் வெளியான பிறகு, தற்போது திரையரங்குகளில் வெளியாகும் வடிவத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இதற்கு காரணம், தணிக்கைக் குழு தரப்பில் இருந்து அதுபோன்ற மாற்றங்களை மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், ரசிகர்களுக்கு புதிதாக தெரியும் வகையில் சில சிறிய விஷயங்கள் உள்ளன. தணிக்கையில் நீக்கப்பட்ட சில காட்சிகள் மற்றும் வசனங்கள் தற்போது மீண்டும் படத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

எனக்கு தெரிந்த வரையில், ஏற்கனவே பலர் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டனர். அதனால் அவர்கள் மீண்டும் திரையரங்கிற்கு வருவார்கள் என்று உறுதியாக கூற முடியாது. குறிப்பாக படத்தின் கடைசி 30 நிமிடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தீவிரமான கருத்துகளை கொண்டதாகவும் இருக்கும்.இந்த படம் முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படம் கிடையாது. அதேபோல், தவெக கட்சியை புகழும் வகையிலும் உருவாக்கப்படவில்லை. நல்ல அரசியல் குறித்து பேசும் ஒரு படமாக இது இருக்கும். அதனால் இணையத்தில் பார்த்திருந்தாலும், ரசிகர்கள் திரையரங்குகளில் வந்து இப்படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது எனக்கும், விஜய் சாருக்கும், தயாரிப்பாளருக்கும் சற்று சிரமமாக இருந்தது. விஜய் சாருக்கு ஏராளமான குழந்தை ரசிகர்கள் உள்ளனர். அவர்களால் திரையரங்குகளில் படம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது வருத்தமாக உள்ளது.தணிக்கைக் குழுவின் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டமிட்ட தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. அதுமட்டுமின்றி, படம் இணையத்தில் கசிந்த சம்பவமும் எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில் விஜய் சாரும் மிகவும் வருத்தப்பட்டார். ஆனால் உடனடியாக என்னை தொடர்பு கொண்டு, ‘கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும். இதுபோன்ற பிரச்சனைகள் சினிமாவில் நடக்கக்கூடியவைதான். இதையும் நாம் ஒன்றாக சமாளிப்போம்’ என்று கூறி எனக்கு தைரியம் அளித்தார்.

முதல்வர் விஜய் சாருக்கு ‘ஜனநாயகன்’ திரைப்படம் இருநூறு சதவீதம் மாஸ் படமாக இருக்கும். அவர் முதலமைச்சராக வருவார் என்று நான் நினைக்கவில்லை. என்னை போலவே பலரும் அவருடைய சக்தியை குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். ஆனால் மக்கள் மீது அவர் வைத்திருக்கும் அக்கறையும், மக்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பும் தற்போது மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading