நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘ஜெயிலர் 2’ படத்தில், நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விஜய் சேதுபதி பேசுகையில், தனக்கு ரஜினிகாந்த் மீது அளவில்லாத மரியாதையும் விருப்பமும் இருப்பதாக கூறினார். அவருடன் இணைந்து பணியாற்றும் நேரங்களில் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் தெரிவித்தார். தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
மேலும், வில்லன் கதாபாத்திரங்களை தேர்வு செய்வது குறித்து பேசிய அவர், தன்னை கவரும் கதைகளில் மட்டுமே வில்லன் அல்லது சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறினார். வில்லன் கதாபாத்திரங்களுக்காக பல கதைகளை கேட்டுள்ளதாகவும், பெரும்பாலான நேரங்களில் கதாநாயகனை உயர்த்தும் வழக்கமான வில்லன் வேடங்களையே பலர் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். அத்தகைய ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் விஜய் சேதுபதி கூறினார்.
