தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படக்குழு!

மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் இந்தியாவில் டிசம்பர் 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் டிசம்பர் 18-ம் தேதி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு நாள் முன்னதாக வெளியிடப்படுவதாக மார்வெல் இந்தியா தெரிவித்துள்ளது. ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படங்களை இயக்கிய ரஸ்சோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளனர்.

மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸின் 39-வது படமாக உருவாகியுள்ள இதில், அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் பிரபலமான ராபர்ட் டவுனி ஜூனியர், டாக்டர் டூம் என்ற வில்லனாக நடிக்கிறார். மேலும், கிறிஸ் இவான்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர். இப்படத்தில் பல சூப்பர் ஹீரோக்கள் ஒன்றிணைந்து டாக்டர் டூமை எதிர்கொள்ளவுள்ளனர்.

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்துக்குப் பிறகு வெளியான சில மார்வெல் படங்கள் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், இந்தப் புதிய படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே, இந்திய ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவையும் மார்வெல் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் இவான்ஸ் ஆகியோர் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Add a Comment

Leave a Reply