நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரைக்கு வரவிருந்தது. ஆனால், திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கப்படாத காரணத்தால், முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட தேதியில் படம் வெளியாகவில்லை. இதனைத் தொடர்ந்து, தணிக்கைச் சான்று வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு யு/ஏ சான்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு தரப்பில் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டில் தடை உத்தரவு பெறப்பட்டதால், படம் வெளியாவதற்கான தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதற்கு பதிலாக சென்சார் போர்டு தரப்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சூழலில், ‘ஜனநாயகன்’ படத்தின் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ஜனவரி 20-ம் தேதிக்குள் இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. அதோடு, உயர்நீதிமன்ற அமர்வில் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்குமாறும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
