சிறிய வயதில் மாடுகளை எல்லாம் குளிப்பாட்டியுள்ளேன்… பொங்கல் நினைவுகளை பகிர்ந்த நடிகை அதுல்யா!

நடிகை அதுல்யா சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது சினிமா பயணம் எந்தவிதமான முன்திட்டமுமின்றி இயல்பாகவே தொடங்கியதாக தெரிவித்துள்ளார். கல்லூரியில் படித்து வந்த காலத்தில், நண்பர்களுடன் சேர்ந்து சொந்த செலவில், ஒரு சாதாரண கேமராவை பயன்படுத்தி ‘காதல் கண் கட்டுதே’ என்ற குறும்படத்தை எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த குறும்படம் முழுநீள திரைப்படமாக வெளியாகும் சூழல் உருவானது. அந்த படம் திரைக்கு வருவதற்கு முன்பே ரசிகர்கள் அதை கொண்டாடத் தொடங்கியது எங்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது.

குறிப்பாக, எனது புகைப்படங்களையும் கண்களையும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ரசிகர்கள் ஸ்டேட்டஸாக வைத்தது, என்னை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு சேர்த்தது. பொதுவாக பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோக்கள், அதிக திரையரங்குகள் ஆகியவற்றால் தான் ஒரு படம் மக்களிடம் அதிகமாக சென்றடையும் என நினைக்கப்படும். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அதிக பணம் செலவழிக்காமல் உழைப்பை மட்டுமே முதலீடாக கொண்டு உருவான ‘காதல் கண் கட்டுதே’ இவ்வளவு பெரிய அளவில் ரீச் ஆனது உண்மையில் ஒரு பெரிய விஷயமாகவே தோன்றியது.

அதேபோல், ‘டீசல்’ படம் இந்த அளவிற்கு பேசப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த படமும் ரசிகர்களிடையே விவாதிக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய சூழலில், எந்த நடிகை அதிக ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார், எத்தனை படங்கள் லைனப்பில் வைத்துள்ளார் என்பதைக் கொண்டு தான் அவர்களை ‘புக்’ செய்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதே நேரத்தில், சில இயக்குநர்கள் தாங்கள் எழுதிய கதைக்கு பொருத்தமாக சரியாக இருப்பார்கள் என்று நினைத்தால் மட்டுமே, சொந்த மண்ணைச் சேர்ந்த நடிகைகளுக்கு வாய்ப்பு வழங்குகிறார்கள் என்பதும் நம்பிக்கையை தருகிறது.

‘காந்தாரா’, ‘அமரன்’ போன்ற படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதேபோல், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களும் நல்ல ஆதரவை பெற்றுவருவது மகிழ்ச்சியான விஷயம். ‘டூரிஸ்ட் பேமிலி’ போன்ற படங்களை பார்க்கும்போது, எந்த நடிகையாக இருந்தாலும் இதுபோன்ற படங்களில் நடித்திருக்கலாமே என்ற எண்ணம் தோன்றுவது இயல்பானதே.

பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளை நான் எப்போதும் சொந்த ஊரில் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறேன். என் குடும்பம் முழுவதும் விவசாய குடும்பம். நான் சிறுமியாக இருந்த காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் மாடுகள் வளர்க்கப்பட்டன. சிறிய வயதில் மாடுகளை குளிப்பாட்டிய அனுபவமும் எனக்கு உள்ளது. பொங்கல் வந்துவிட்டால், மாடுகளின் கொம்புகளுக்கு பெயின்ட் அடிப்பது பெரும்பாலும் நான்தான் செய்வேன்.

எனவே தற்போது எந்த படப்பிடிப்பில் இருந்தாலும், பொங்கல் பண்டிகைக்காக கண்டிப்பாக கோவை வந்து கொண்டாடுவேன். தொண்டாமுத்தூரில் எங்களுக்கு தோட்டம் உள்ளது. வீடு வடவள்ளியில் அமைந்துள்ளது. பொங்கலின் போது இரண்டு நாட்கள் ஊரே திருவிழா போல கொண்டாட்டத்தில் மூழ்கும். பல போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவோம். சர்க்கரை பொங்கலை நான் தான் தயாரிப்பேன். ஊரில் பொங்கலை ஒட்டி நடைபெறும் ஜல்லிக்கட்டையும் நேரில் பார்த்திருக்கிறேன். அனைவரும் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading