மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த ‘மன ஷங்கர வர பிரசாத் காரு’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகி, வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில், நடிகர் வெங்கடேஷ் ஒரு சிறப்பு கேமியோ ரோலில் தோன்றியுள்ளார்.
இந்த திரைப்படத்தை இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘சங்கராந்திக்கு வஸ்துன்னம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போதைய படத்திற்கும் கிடைத்துள்ள வரவேற்பை தொடர்ந்து, படக்குழுவினர் அனைவரும் ஒன்றிணைந்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
அந்த பேட்டியில் சிரஞ்சீவி பேசுகையில், விவாகரத்து பெறும் மனநிலையில் இருந்த சில தம்பதிகள், இந்த படத்தை பார்த்த பிறகு மீண்டும் ஒன்றாக சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, அனில் ரவிபுடி மிகச் சிறப்பான வேலை செய்துள்ளார். கணவன்-மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகளில் மூன்றாம் நபர் தலையிடக் கூடாது என்பது உண்மை. படத்தில் வரும் ஒரு காட்சி, ஒரு தம்பதியை தங்களின் விவாகரத்து முடிவை மாற்றச் செய்துள்ளது. தற்போது அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். ஒரு திரைப்படம் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
