சின்னத்திரையில் தமிழ் நடிகர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது – நடிகை பிரேமி வெங்கட்!

தமிழ் சின்னத்திரையில் அழுத்தமான மற்றும் நினைவில் நிற்கும் கதாபாத்திரங்கள் மூலம் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் நடிகை பிரேமி வெங்கட். செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் வெப் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அளித்த பேட்டியில் தனது அனுபவங்களை விரிவாக பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் உங்கள் பயணம் எப்படி தொடங்கியது என்ற கேள்விக்கு, செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த காலத்தில் ‘வாணி ராணி’ சீரியலில் நடிகை ராதிகாவுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்ததே தனது முதல் பெரிய திருப்பம் என தெரிவித்துள்ளார். அதன் பின்னர் ‘சந்திரலேகா’ சீரியல் மூலம் மக்கள் மனதில் தனி இடம் பிடிக்க முடிந்தது. ‘கண்மணி’, ‘சுந்தரி’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ உள்ளிட்ட சுமார் 15 சீரியல்களில் நடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சின்னத்திரையில் சிறந்த வில்லி கதாபாத்திரம் மற்றும் சிறந்த அம்மா கதாபாத்திரத்திற்கான விருதுகளை பெற்றது பெருமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது என்ன என்ற கேள்விக்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீட்டின் மாடியில் பொங்கல் வைத்து கொண்டாடும் பாரம்பரியம் நினைவுக்கு வருகிறது என கூறினார். மேலும், மாமியார் வீட்டிற்கு சென்று கிராமத்தில் பொங்கல் கொண்டாடும் போது அந்த பண்டிகை மிகவும் உற்சாகமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டுவது, பெண்கள் ஒன்றாக சேர்ந்து கோலமிடுவது என கிராமத்து பொங்கல் முழுக்க கோலாகலமாக இருக்கும்.

ஆனால் சமீப காலங்களில் வேலைப்பளு அதிகரித்துள்ளதால், பண்டிகை நாட்களிலும் குடும்பத்துடன் முழுமையாக இருக்க முடியாத சூழல் இருப்பது வருத்தமாக உள்ளது என அவர் கூறினார். தமிழ் சீரியல் நடிகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசுகையில், தமிழ் சீரியல்களை பெரும்பாலும் தமிழக மக்கள் தான் பார்க்கிறார்கள். ஆனால் வெளிமாநில நடிகர், நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதால், தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர்களுக்கு இது ஒரு சவாலாக மாறியுள்ளது என தெரிவித்தார்.

கன்னட சீரியல்களில் நடிப்பின் போதே குரல் பதிவு செய்யப்படுவதால், கன்னட மொழி தெரிந்தவர்கள் மட்டுமே அங்கு நடிக்க முடியும். ஆனால் தமிழில் குரலை தனியாக பதிவு செய்வதால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. இதன் காரணமாக, சிறிய குணச்சித்திர கதாபாத்திரங்களில்கூட தமிழக நடிகர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது வேதனை அளிக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், தனது குழந்தைகளையும் வாழவைக்க வேண்டும் என்பதே தனது ஆதங்கம் என கூறினார்.

சமூக ஊடகங்கள் நடிகர்களுக்கு சாதகமா, பாதகமா என்ற கேள்விக்கு, சமூக ஊடகங்கள் மூலம் பலர் அடையாளம் காணப்படுவது நல்ல விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. தனிப்பட்ட நபர்கள் குறித்து அவதூறு பரப்புவது அதிகரித்துள்ளது. இது நடிகர்களுக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ரசிகர்களிடம் இருந்து கிடைத்த மறக்க முடியாத பாராட்டுகள் குறித்து பேசுகையில், பெண்களும் இளைஞர்களும் தன்னை பாராட்டுவது மேலும் முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்தை தருவதாக கூறினார். குறிப்பாக தனது கண்கள் மிகவும் பிடிக்கும் என பலர் கூறியிருப்பதாகவும், நடிப்பின் போது தனது கண்களின் செய்கை கதாபாத்திரத்துடன் ஒன்றிணைவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இதை தனது அம்மா கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைவார் என நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.அடுத்த கட்ட பயணம் குறித்து பேசுகையில், தற்போது புதிதாக நடிக்க வருபவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி அளித்து வருவதாகவும், எதிர்காலத்தில் ஒரு முழுமையான நடிப்பு பயிற்சி பள்ளியை தொடங்க வேண்டும் என்பதே தனது நீண்டகால கனவு என்றும் நடிகை பிரேமி வெங்கட் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading