‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. அதன் பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துத் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை தமிழ் சினிமாவில் உறுதியாகப் பிடித்தார். நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள ஊர்வசி, தென்னிந்திய திரையுலகில் எண்ணற்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். காலப்போக்கில், கதாநாயகி வேடங்களைத் தாண்டி, தற்போது குணசித்திர கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ஊர்வசியின் மகள் தேஜலட்சுமியும் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். மலையாளத்தில் தயாராகும் ‘சுந்தரியாயவள் ஸ்டெல்லா’ என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள தேஜலட்சுமி, ‘பாப்லோ பார்ட்டி’ என்ற படத்தில் தாயார் ஊர்வசியுடன் இணைந்து நடித்துள்ளார். இதன் மூலம் தாய்–மகள் இருவரும் ஒரே திரையில் தோன்றியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நடிகை ஊர்வசியும் அவரது மகள் தேஜலட்சுமியும் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இந்த சந்திப்பின்போது எடுத்த புகைப்படங்களை தேஜலட்சுமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவையும் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “2001-ம் ஆண்டு நான் சிறுமியாக இருந்தபோது, அம்மா நடித்த ‘பஞ்சதந்திரம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நானும் இருந்தேன். அப்போது நான் கோபமாக இருந்தால், கமல் சார் என்னை தூக்கிச் சென்று எனக்கு பிடித்த உணவை ஊட்டி அமைதிப்படுத்துவார். அதனால் நான் அழாமல் இருந்துவிடுவேன். அது என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாத ஒரு நினைவு” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கடந்த ஆண்டு சைமா விருது விழாவில் அவர் எனக்கு அருகிலேயே இருந்தபோதும், அவருக்கு ‘ஹாய்’ கூட சொல்ல முடியாமல் நான் அழுதுவிட்டேன். அதன்பின் அம்மா, ‘பரவாயில்லை மோலே, ஒருநாள் நாம் அவரை அலுவலகத்திலேயே சென்று சந்திப்போம்’ என்று ஆறுதல் கூறினார். அந்த ஒருநாள் விரைவில் வர வேண்டும் என்று நான் மனதார பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். இப்போது அந்த நாள் வந்துவிட்டது. அவரை வெறும் 10 நிமிடங்கள்தான் சந்தித்தேன். ஆனால் அந்த 10 நிமிடங்கள் 10 வருடங்களைப் போல உணர்ந்தது” என்று அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
